குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
"பல நூற்றாண்டுகளாக உலகில் ஆக்கப்பூர்வமான பணிகளை உருவாக்குவதிலும் மாபெரும் ஆளுமைகளின் சக்தி தொடர்ந்து வருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். சுவாமி பிரேமானந்த் மகாராஜின் பிறந்த நாளில், லேகம்பாவில் புதிதாக கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் மற்றும் சாது நிவாஸ் ஆகியவை இந்தியாவின் துறவற பாரம்பரியத்தை மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். சேவை மற்றும் கல்விக்கான பயணம் தொடங்குகிறது என்றும், இது பல தலைமுறையினருக்கும் பயனளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ண தேவ் கோயில், ஏழை மாணவர்களுக்கான விடுதி, தொழிற்பயிற்சி மையம், மருத்துவமனை மற்றும் பயணிகள் குடியிருப்பு போன்ற உன்னத பணிகள் ஆன்மீகத்தை பரப்புவதற்கும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும் ஒரு பாலமாக செயல்படும் என்று அவர் மேலும் கூறினார். துறவிகளின் நட்பு மற்றும் ஆன்மீகச் சூழல் போன்றவற்றில் தமக்கு விருப்பம் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சனாந்த் தொடர்பான நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இப்பகுதி தற்போது பொருளாதார வளர்ச்சியை கண்டு வருவதாக் குறிப்பிட்டார். துறவிகளின் ஆசி, அரசின் முயற்சிகள், கொள்கைகள் இத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில் சமூகத்தின் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிட்ட திரு மோடி, பொருளாதார வளர்ச்சியுடன் சனாந்த் ஆன்மீக வளர்ச்சியின் மையமாக உருவெடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். சீரான வாழ்க்கைக்கு, பணத்துடன் ஆன்மீகமும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் கூறினார். நமது துறவிகள், முனிவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சனாந்தும் குஜராத்தும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தின் திறன் அதன் விதையால் அடையாளம் காணப்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், ராமகிருஷ்ண மடம் அத்தகைய ஒரு மரமாகும். அதன் விதை சுவாமி விவேகானந்தர் போன்ற ஒரு தலைசிறந்த துறவியின் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது என்று கூறினார். மனிதகுலத்தின் மீது இது ஏற்படுத்தும் தாக்கம் எல்லையற்றது என்றும் அவர் கூறினார். ராமகிருஷ்ண மடத்தின் மையமாக விளங்கும் கருப்பொருளைப் புரிந்து கொள்வதன் மூலம், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். விவேகானந்தரின் சிந்தனைகளுடன் வாழக் கற்றுக் கொண்டபோது, வழிகாட்டுதலுக்கான புரிதலை தான் அனுபவிக்க முடிந்ததாக அவர் கூறினார். ராமகிருஷ்ண இயக்கமும், அதன் துறவிகளும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் அவரது வாழ்க்கைக்கு எவ்வாறு வழிகாட்டின என்பதை மடத்தின் துறவிகள் அறிந்திருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். துறவிகளின் ஆசியுடன், இந்த இயக்கம் தொடர்பான பல்வேறு பணிகளிலும் தாம் முக்கியப் பங்கு வகித்ததை திரு மோடி சுட்டிக்காட்டினார். பூஜ்ய சுவாமி ஆத்மஸ்தானந்த் ஜி மகராஜ் தலைமையின் கீழ், 2005-ம் ஆண்டில் வதோதராவின் திலாரம் பங்களாவை ராமகிருஷ்ணா இயக்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, சுவாமி விவேகானந்தரும் தனது நேரத்தை அங்கு செலவழித்தாக கூறினார்.
காலப்போக்கில் இந்த இயக்கத்தின் நிகழ்ச்சிகள், இதன் ஒரு அங்கமாக இருக்கும் பெருமையை ஏற்றுக்கொண்ட திரு மோடி, இன்று ராமகிருஷ்ண இயக்கம் உலகம் முழுவதும் 280-க்கும் மேற்பட்ட கிளைகளையும், இந்தியாவில் ராமகிருஷ்ண தத்துவத்துடன் தொடர்புடைய சுமார் 1200 ஆசிரம மையங்களையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த ஆசிரமங்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான தீர்மானத்தின் அடித்தளமாக செயல்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாக ராமகிருஷ்ண இயக்கத்தின் சேவைப் பணிகளுக்கு குஜராத் மாநிலம் ஒரு சாட்சியாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார். பல தசாப்தங்களுக்கு முன்பு சூரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போல, மோர்பியில் உள்ள அணையில் உடைப்பு, நிலநடுக்கத்தால் பூஜ்-ல் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, குஜராத்தில் பேரிடர் ஏற்படும் போதெல்லாம், ராமகிருஷ்ண இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை அவர் நினைவு கூர்ந்தார். நிலநடுக்கத்தால் சேதமடைந்த 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் கட்டமைத்ததில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், குஜராத் மாநில மக்கள் இந்த சேவையை இன்னமும் நினைவில் வைத்திருப்பதாகவும், அதிலிருந்து புதிய உத்வேகம் பெறுவதாகவும் கூறினார்.
குஜராத் மாநிலத்துடன் சுவாமி விவேகானந்தாவின் ஆன்மீக உறவு குறித்து குறிப்பிட்ட பிரதமர், அவரது வாழ்க்கைப் பயணத்தில் குஜராத் முக்கிய பங்காற்றியதாக கூறினார். சுவாமி விவேகானந்தர் குஜராத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும், சிகாகோ உலக சமய மாநாடு குறித்து அங்குதான் அவர் முதலில் அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். குஜராத்தில் அவர் பல்வேறு வேதங்களை ஆழ்ந்து படித்ததாகவும், அவற்றைப் பரப்புவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். 1891-ம் ஆண்டில், சுவாமிஜி போர்பந்தரில் உள்ள போஜேஷ்வர் பவனில் பல மாதங்கள் தங்கியிருந்ததாகவும், அப்போதைய குஜராத் அரசு இந்தக் கட்டிடத்தை ராமகிருஷ்ணா இயக்கத்துக்கு நினைவிடம் கட்ட வழங்கியதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் மாநில அரசு சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடியதையும், அதன் நிறைவு விழாவானது காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதையும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சீடர்கள் பங்கேற்றதையும் திரு மோடி நினைவு கூர்ந்தார். குஜராத்துடன் சுவாமிஜி கொண்டுள்ள நல்லுறவின் நினைவாக, சுவாமி விவேகானந்தர் சுற்றுலா சுற்றுச்சாலை அமைப்பதற்கான திட்டத்தை குஜராத் மாநில அரசு தற்போது தயாரித்து வருவது குறித்து திரு மோடி திருப்தி தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தர் நவீன அறிவியலின் ஆதரவாளர் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியலின் முக்கியத்துவம் குறித்து விவரிப்பதுடன் அதனை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்வதிலும் உள்ளது என்று நம்பிக்கை கொண்டிருந்தார். நவீன தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட திரு மோடி, உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள், உள்கட்டமைப்புத் துறையில் நவீன கட்டுமானம் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குதல் போன்ற பல்வேறு சாதனைகளால் இந்தியா தற்போது அடையாளம் காணப்பட்டு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இன்றைய இந்தியா தனது புத்திக் கூர்மை, பாரம்பரியம், தொன்மையான போதனைகளின் அடிப்படையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் கூறினார். "இளைஞர் சக்தி நாட்டின் முதுகெலும்பு என்று சுவாமி விவேகானந்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்" என்று திரு மோடி கூறினார். இளைஞர்களின் சக்தி குறித்து சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுபடுத்திய பிரதமர், இதுதான் சரியான தருணம் என்றும் அந்தப் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்றும் கூறினார். அமிர்த காலத்தின் புதிய பயணத்தை இந்தியா இன்று தொடங்கியிருப்பதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை இந்தியா நோக்கிப் பயணிப்பதாகவும் அவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என்று வலியுறுத்திய திரு மோடி, "இந்தியா உலகின் இளையோர் அதிகம் உள்ள நாடு" என்று பெருமிதம் தெரிவித்தார். இன்று இந்திய இளைஞர்கள் உலகில் தங்களது திறனை நிரூபித்துள்ளதாகவும் இளையோர் சக்திதான் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை வழிநடத்தி வருவதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்று கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு துறையிலும் தலைமைப் பண்புக்கு இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளைப் போலவே அரசியலிலும் நமது இளைஞர்கள் நாட்டை வழிநடத்த முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இளைஞர் தினமாக கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான 2025-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று, தில்லியில் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக பிரதமர் அறிவித்தார். நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரம் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான இளைஞர்கள் இதில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இளைஞர்களின் பார்வையில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும் என்றும், இளைஞர்களை அரசியலுடன் இணைப்பதற்கான வரைவுகள் வகுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். வரும் காலங்களில் திறன் வாய்ந்த 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான அரசின் தீர்மானத்தை திரு மோடி எடுத்துரைத்தார். இந்த இளைஞர்கள் 21-ம் நூற்றாண்டில் இந்திய அரசியலின் புதிய முகமாகவும், நாட்டின் எதிர்காலமாகவும் உருவெடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆன்மீகம், நீடித்த வளர்ச்சி ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை வலியுறுத்திய பிரதமர், பூமியை சிறந்த தளமாக மாற்றுவதற்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார். இந்த இரண்டு சிந்தனைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், தலைசிறந்த எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தர் ஆன்மீகத்தின் நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அத்தகைய ஆன்மீகத்தை விரும்பியதாகவும் அவர் கூறினார். எண்ணங்களின் தூய்மையுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார். பொருளாதார வளர்ச்சி, சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பராமரிப்பதன் மூலம் நீடித்த வளர்ச்சியின் இலக்கை அடைய முடியும் என்று திரு மோடி வலியுறுத்தினார். இந்த இலக்கை அடைய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டும் என்று அவர் கூறினார். ஆன்மீகம், நிலைத்தன்மை ஆகிய இரண்டிலும் சமநிலை முக்கியமானது என்பதை ஒப்புக் கொண்ட திரு மோடி, ஒன்று மனதில் சமநிலையை உருவாக்குகிறது, மற்றொன்று இயற்கையுடன் சமநிலையைப் பராமரிக்க நமக்குக் கற்பிக்கிறது என்றார். ராமகிருஷ்ணா இயக்கம் போன்ற அமைப்புகள் லைஃப், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம் என்பது போன்ற இயக்கங்களை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
"சுவாமி விவேகானந்தர் இந்தியாவை ஒரு வலிமையான, தற்சார்பு நாடாக உருவெடுப்பதைக் காண விரும்பினார்" என்று கூறிய திரு மோடி, தனது கனவை நனவாக்கும் வகையில் நாடு தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தனது உரையை நிறைவு செய்த அவர், இந்த கனவு விரைவில் நிறைவேற வேண்டும் என்றும், ஒரு வலுவான திறன் வாய்ந்த இந்தியா மீண்டும் மனிதகுலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் சிந்தனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.