தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் இரண்டாவது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.
கடந்த முறை 2022 ஜூன் மாதம் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் மாநாட்டுக்குப் பின், நாடு அடைந்த வளர்ச்சியின் மைல்கற்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இந்தியா ஜி-20 தலைமைப் பொறுப்பை அடைந்தது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது, புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் முன்னேற்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகளை பிரதமர் மேற்கோள் காட்டினார். தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையின் தொடக்கம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒப்புதல் போன்றவையும் பிரதமரின் உரையில் இடம் பெற்றன. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு முன்னேற்றத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப, உள்கட்டமைப்பு, முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குதல் ஆகிய நான்கு தூண்களில் நாடு கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார். இன்று, முழு உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது என்றும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சீரான நிலையைக் கொண்டுவரும் நாடாக நாம் பார்க்கப்படுகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சிக்கு ஆதரவான நிர்வாகம், எளிதாக வணிகம் செய்வது, எளிதாக வாழ்வது, வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர், முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள பல்வேறு ஆர்வமுள்ள மாவட்டங்களில் கிடைத்த வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்து பேசிய பிரதமர், அவற்றை முறைப்படுத்துவதற்கு மாநிலங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மேலும் எம்எஸ்எம்இ-களை அரசு இ-சந்தை இணையப்பக்கத்தில் கொண்டு வருவது குறித்தும் அவர் விவாதித்தார். மாநிலங்கள் தங்களின் சிறந்த உள்ளூர் தயாரிப்புகளைக் கண்டறிந்து தேசிய மற்றும் சர்வதேச தகுதியை அடைய உதவ வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்திய ஒற்றுமை சிலையில் உள்ள ஏக்தா வணிக வளாகத்தை பிரதமர் மோடி அதற்கு உதாரணமாக மேற்கோள் காட்டினார்.
ஒரு காலத்தில் நாடு எதிர்கொண்ட அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றினால் ஏற்பட்ட சுமையை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். சில பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் பேசினார்.
பல்வேறு அரசுத் துறைகள் ஒரே ஆவணங்களைக் கேட்பது குறித்து பேசிய பிரதமர், சுய சான்றளிப்பு மற்றும் படிவங்களைத் தரப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவை என்றார். மேலும் பிரதமரின் விரைவுசக்தி திட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். தரவு பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு பாதுகாப்பான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பிரதமர் பேசினார்.
நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேம்பாடு குறித்து பேசிய பிரதமர், சுழற்சிப் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, மிஷன் லைஃப் (சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை) மற்றும் அதை மேம்படுத்துவதில் மாநிலங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் முயற்சியினால், ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததாகக் கூறிய பிரதமர், சிறு தானியங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதோடு, எதிர்காலத்தில் பிரசித்தி பெற்ற உணவாக மாறக்கூடும் என்றார். சிறு தானியங்கள் தொடர்பான ஆராய்ச்சியில், அதாவது பதப்படுத்துதல், பேக்கேஜிங், சந்தைப்படுத்துதல், குறியீடு செய்தல் போன்றவற்றில் மாநிலங்கள் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். மாநிலங்களில் நடைபெறும் ஜி-20 கூட்டங்களில் சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மாநிலங்களில் நடைபெறும் ஜி-20 கூட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளில், சாதாரண குடிமக்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். போதைப்பொருள், சர்வதேச குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு மண்ணில் இருந்து வரும் தவறான தகவல்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும் மாநிலங்களுக்கு பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த தலைமைச் செயலாளர்களின் மாநாட்டை நடத்த பல்வேறு மட்டங்களில் உள்ள சுமார் 4,000 அதிகாரிகள் பணியாற்றியுள்ளதாகவும், இதற்காக 1 லட்சத்து 15 ஆயிரம் மணி நேரம் மனித உழைப்பு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த முயற்சிகள் களத்திலும் பிரதிபலிக்கத் தொடங்க வேண்டும் என்றும், மாநில அரசுகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை நித்தி ஆயோக் உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.