மாலத்தீவின் மக்கள் மஜ்லிஸ் எனப்படும் நாடாளுமன்றத்தின் தலைவர் திரு.முகமது நஷீது புதுதில்லியில் இன்று (13.12.2019) பிரதமர் திரு.நரேந்திர மோடியைச் சந்தித்தார். இவர், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களின் கூட்டு அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ளார்.
நாடாளுமன்றத் தலைவர் நஷீதை வரவேற்ற பிரதமர், இந்தியா-மாலத்தீவு இடையிலான துடிப்புள்ள உறவுகளின் முக்கியப் பகுதியாக இரு நாட்டு நாடாளுமன்றங்களின் ஒத்துழைப்பு விளங்குகிறது என்று கூறினார். இருதரப்புக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை மேலும் வலுவாக்க இந்தப் பயணம் உதவும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
இந்தாண்டு ஜூன் மாதம் மாலேவுக்குச் சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை நினைவு கூர்ந்த பிரதமர், அவைத் தலைவர் நஷீத்தின் உறுதியான தலைமையின் கீழ் மாலத்தீவில் ஜனநாயகம் மென்மேலும் வலுப்படும் என்றும் கூறினார். நிலையான, வளமான, அமைதியான, மக்களின் உள்ளக்கிடக்கைகளை நிறைவேற்றக் கூடிய மாலத்தீவு அமைய அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
சென்ற ஆண்டு மாலத்தீவில் புதிய அரசு பதவியேற்ற பிறகு இந்தியா-மாலத்தீவு உறவுகளை வலுப்படுத்த தொடர்ந்து ஆதரவளித்து வரும் பிரதமருக்கு நாடாளுமன்றத் தலைவர் நஷீத் நன்றி கூறினார். மாலத்தீவு மக்களின் நலன்களுக்கென மாலத்தீவின் வளர்ச்சிப் பணிகளில் உதவி அளிப்பதற்காகவும் பிரதமருக்கு அவர் நன்றி கூறினார். மாலத்தீவு அரசின் “முதலாவதாக இந்தியா” என்ற கொள்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அவர் உறுதி அளித்தார். தம்முடன் நாடாளுமன்றக் குழுவினர் இந்தியா வந்திருப்பது இருநாடுகளுக்கும் இடையேயான சகோதர உறவுகளையும், நட்புறவுகளையும் மேலும் வலுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.