ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற்றுவரும் “துடிப்புமிக்க குஜராத் உலக உச்சிமாநாடு 2019”-யையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடியும், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் மேதகு திரு. ஷாப்கட் மிர்ஜியோயெவ் -வும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். முன்னதாக உயர்நிலை குழுவினருடன் வந்த மிர்ஜியோயெவ் காந்திநகருக்கு 17 ஆம் தேதி வந்து சேர்ந்தபோது, குஜராத் ஆளுநர் திரு. ஓ.பி. கோஹ்லி அவர்களை வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது மிர்ஜியோயெவ் மற்றும் அவருடைய குழுவினருக்கு திரு. மோடி அன்பான வரவேற்பு அளித்தார். 2018 செப்டம்பர் 30 – அக்டோபர் 1 தேதிகளில் அதிபர் மிர்ஜியோயெவ் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தபோது நடந்த சந்திப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் மற்றும் அமலாக்கம் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். குஜராத் மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஆண்டிஜன் மாகாணத்துக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு. மோடி, அப்போது ஆண்டிஜன் மாகாண ஆளுநரும் வந்திருந்ததைக் குறிப்பிட்டார். அதிபரின் பயணத்தின் விளைவாக, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் குஜராத் மற்றும் ஆண்டிஜன் மாகாணங்களுக்கு இடையில் உறவுகள் மேலும் மேம்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
2019 ஜனவரி 12, 13 தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் பகுதியில் வெளியுறவு அமைச்சர்கள் அளவில் முதலாவது இந்தியா – மத்திய ஆசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஆதரவு அளித்தமைக்காக அதிபர் மிர்ஜியோயெவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைகள் அந்தக் கூட்டத்தில் நடைபெற்றதையும் அவர் குறிப்பிட்டார்.
துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தமைக்காக பிரதமருக்கு, அதிபர் ஷவ்கட் மிர்ஜியோயெவ் நன்றி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு உஸ்பெகிஸ்தான் அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருந்துகள், சுகாதாரம், வேளாண்-தொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு உஸ்பெகிஸ்தானுக்கு வளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
முதலாவது இந்தியா – மத்திய ஆசியா பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைவதற்கு உதவியதற்காக பிரதமருக்கு அதிபர் மிர்ஜியோயெவ் பாராட்டு தெரிவித்தார். மத்திய ஆசியப் பகுதியில் இந்தியாவுக்கு உள்ள ஆக்கபூர்வமான தாக்கம் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதில் பங்கேற்பு நாடுகளுக்கு உள்ள கூட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்தக் கூட்டம் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சித் துறைக்கும், உஸ்பெகிஸ்தான் குடியரசின் நோவோய் மினரல்கள் மற்றும் மெட்டலர்ஜிக்கல் கம்பெனிக்கும் இடையில் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்காக யுரேனியம் தாது அடர்பொருள் வழங்குவதற்கு நீண்டகால ஒப்பந்தம், இரு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தியா ஏற்றுமதி – இறக்குமதி வங்கிக்கும், உஸ்பெகிஸ்தான் குடியரசின் அரசுக்கும் இடையில், உஸ்பெகிஸ்தானில் வீட்டுவசதி மற்றும் சமூக கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி அளிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அதிபர் மிர்ஜியோயெவ் முன்பு அரசு முறைப் பயணமாக வந்தபோது, 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியா கடனுதவியாக அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருந்தார்.