ஆப்கானிஸ்தானின் தலைமை நிர்வாகி (தலைமை செயல் தலைவர்) டாக்டர் அப்துல்லா அப்துல்லா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்தார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள டாக்டர் அப்துல்லா-வுக்கு பிரதமர் உற்சாக வரவேற்பை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நெருக்கமான மற்றும் பலமான பல்முனை பாதுகாப்பு ஒத்துழைப்பு இருப்பதை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, புதிய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது போன்ற வலுப்பட்டுவரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். இருதரப்பு பொருளாதார மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இந்த விவகாரத்தில் அளப்பரிய வாய்ப்புகள் இருப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஆப்கானிஸ்தானில் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், திறன் வளர்ப்புக்கும் தொடர்ந்து இந்தியா ஆதரவு அளித்துவருவதற்கு ஆப்கானிஸ்தான் அரசின் தீவிர வரவேற்பை அப்துல்லா வெளிப்படுத்தினார்.
அமைதியான, ஒருங்கிணைந்த, வளமான, உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக முறையிலான ஆப்கானிஸ்தானை உருவாக்க ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பது என்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் விரிவுபட்ட பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்த விவகாரத்தில், நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் இறுதியில், இரு தலைவர்கள் முன்னிலையில், காவல் பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பரிமாறிக் கொள்ளப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட மொசைக் உருவப்படத்தை தன்னிடம் வழங்கிய டாக்டர் அப்துல்லாவுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.