கர்நாடக மாநிலம் கலபுராகியிலும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திலும் முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம் கலபுராகியில் பெங்களுரு நகரத்தின் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கான பெயர் பலகையை பிரதமர் திறந்து வைத்தார். ஹூப்பள்ளியில் கிம்ஸ் மருத்துவமனையின் உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளுக்கான வளாகத்தையும், பெங்களுரு நகரத்தில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கான கட்டடம் மற்றும் பெங்களுரு பல்கலைக்கழகத்தில் பயிலும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கான விடுதியையும் பொத்தானை அழுத்தி பிரதமர் தொடங்கி வைத்தார். ரெய்ச்சூரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கிடங்கை கலபுராகிக்கு மாற்றுவதற்கான திட்டத்திற்கும் பிரதமர் திரு.மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் ஜன் ஆரோக்யா எனும் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்து கட்டமைப்பிற்கு மேலும் ஊக்கம் தரும் வகையில், தேசிய நெடுஞ்சாலை 45-சி-யில் விக்ரவாண்டிக்கும் தஞ்சாவூருக்கும் இடையேயான நான்கு வழிச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 4-ல் காரைப்பேட்டை- வாலாஜாபேட்டை வழித்தடத்தை ஆறு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த முனையம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் திரவ எரிவாயுவுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
தெற்கு ரயில்வே சார்பில், ஈரோடு – கரூர் – திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் எம்ஜிஆரின் உருவச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.