‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சகங்கள்/முகமைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டினார்.
‘ டவ்-தே’ புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும், நலியாவுக்கும் இடையே மே 18-ம்தேதி பிற்பகல்/மாலையில் மணிக்கு 175 கி.மீ வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை (ஐஎம்டி) அறிவித்துள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஜூனாகாத், கிர் சோமநாத் ஆகிய இடங்களில் மிகப்பலத்த மழையும், சவுராஷ்டிரா, கட்ச், டையூ ஜூனாகாத், போர்பந்தர், தேவ்பூமி, துவாரகா, அம்ரேலி, ராஜ்கோட், ஜாம் நகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மற்றும் மிகப்பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும் 18-ம்தேதி பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் 2-3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்றும், மோர்பி, கட்ச், தேவ்பூமி, துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களின் கடலோரத் தாழ்வான பகுதிகளில் நீர் உட்புக வாய்ப்பு உள்ளது என்றும், போர்பந்தர், ஜூனாகாத், டையூ, கிர் சோமநாத், அம்ரேலி, பாவ்நகர் ஆகிய இடங்களில் 1-2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்றும், இதர கடலோர மாவட்டங்களில் 0.5-1 மீட்டர் உயரத்துக்கு அலையின் எழுச்சி இருக்கும் என்றும் ஐஎம்டி எச்சரித்துள்ளது. இதர சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும், மே 13-ம் தேதி முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை புயல் நிலவரம் குறித்த அறிவிப்புகளை ஐஎம்டி வெளியிட்டு வருகிறது.
அனைத்து கடலோர மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/முகமைகளுடன் அமைச்சரவை செயலர் தொடர்பில் இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள், சம்பந்தப்பட்ட மத்திய முகமைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் முதல் தவணை மாநில பேரிடர் நிவாரண நிதியை விடுவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, படகுகள், மரம் வெட்டும் எந்திரங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்றவற்றுடன் 42 குழுக்களை முன்னேற்பாடுகளுடன் நிறுத்தியுள்ளது. மேலும் 26 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய கடலோரக் காவல் படை, கடற்படை ஆகியவை நிவாரணம், தேடுதல், மீட்பு நடவடிக்கைகளுக்காக கப்பல்களையும், ஹெலிகாப்டர்களையும் ஈடுபடுத்தியுள்ளன. விமானப்படை மற்றும் ராணுவத்தின் பொறியாளர் பணிப்படை பிரிவுகளும், படகுகள், மீட்பு உபகரணங்கள் ஆகியவற்றுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மனிதநேய உதவிகள், பேரிடர் நிவாரண பிரிவுகளுடன் ஏழு கப்பல்கள் மேற்கு கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மேற்கு கரை முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பேரிடர் நிவாரண குழுக்கள், மருத்துவக் குழுக்கள், திருவனந்தபுரம், கண்ணூர் மற்றும் மேற்கு கரையின் இதர இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மின்சார அமைச்சகம் அவசரகால மீட்பு முறைகளை முடுக்கி விட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள், டிஜி செட்டுகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை உடனடி மின்சாரத் தேவைக்காக தயார் நிலையில் வைத்துள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் இணைப்பகங்களை தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பதுடன் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய தயார் நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை முன்னேற்பாடுகளையும், கோவிட் மேலாண்மை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. 10 உடனடி மீட்பு மருத்துவக்குழுக்களையும், 5 பொது சுகாதார குழுக்களையும் அவசர கால மருந்துகளுடன் அது தயாராக வைத்துள்ளது. துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் அனைத்து கப்பல்களைப் பாதுகாக்கவும், அவசர கால கப்பல்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை , பாதிக்க வாய்ப்புள்ள பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கு மாநில முகமைகளுக்கு உதவி வருகிறது. மேலும் புயலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அது மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர், மாநில அரசுகள் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். புயலால் இந்த சேவைகள் பாதிக்கப்படும் போது, உடனடியாக அதனைச் சரிசெய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். புயலால் பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி சேமிப்பு, மாற்று மின்சார ஏற்பாடுகள், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு, மருத்துவமனைகளில் கோவிட் மேலாண்மைக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆகியவை அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர், ஆக்சிஜன் டேங்கர்கள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கவேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார். ஜாம் நகரிலிருந்து ஆக்சிஜன் விநியோகத்தில் சிறு குறைபாடு கூட இல்லாமல் இருப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உரிய கால மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் உள்ளூர் பகுதியினரை ஈடுபடுத்துவது பற்றியும் அவர் அறிவுரை வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை இணையமைச்சர், பிரதமர் அமைச்சரவை செயலரின் முதன்மை செயலர், உள்துறை, சிவில் விமானப் போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகங்கள்/துறைகளின் செயலர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலர், ரயில்வே வாரிய தலைவர், தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குநர்கள், பிரதமர் அலுவலகம், உள்துறை, ஐஎம்டி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.