இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவது என்ற இலக்கை அடைய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதார மேதைகள், தனியார் பங்கு / துணிகர முதலாளி, உற்பத்தி, பயணம் & சுற்றுலா, ஆயத்த ஆடை & விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், பகுப்பாய்வுத்துறை முன்னோடிகள் மற்றும் வேளாண்மை, அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை வல்லுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டம், புதுதில்லியில் உள்ள நித்தி ஆயோக் அலுவலகத்தில், பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த வெளிப்படையான ஆலோசனைக் கூட்டத்தில், களப்பணியில் முன்னணியில் நிற்போர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது, தமக்கு மிகுந்த அளித்ததாக பிரதமர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஆலோசனைகள், கொள்கை வகுப்போர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது திடீரென உருவான கருத்து அல்ல என்றும், நாட்டின் வலிமையை ஆழமாக உணர்ந்து எடுக்கப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எதையும் வலுவான முறையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்திய பொருளாதாரம், மீண்டெழும் திறமை மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வலுவான அடித்தளத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா, நகர்ப்புற வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வலிமை பெற்றவை என்றும் பிரதமர் கூறினார்.
இதுபோன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான விவாதங்கள் மற்றும் கருத்தாழமிக்க ஆலோசனைகள், ஆரோக்கியமான விவாதம் மற்றும் பிரச்சினைகளின் தன்மையை புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற விவாதங்கள் சாதகமான மனநிலையை உருவாக்குவதோடு, சமுதாயத்தில் “நம்மால் முடியும்” என்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியா, அளவற்ற வாய்ப்புகள் உள்ள நாடு என்று குறிப்பிட்ட அவர், எதார்த்தத்திற்கும், அனுமானத்திற்கும் இடையேயான இடைவெளியை நிரப்ப சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
“நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதோடு, ஒரே தேசம் என்ற உணர்வை பெறுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார வல்லுநர்கள் திரு சங்கர் ஆச்சாரியா, திரு ஆர் நாகராஜ், திருமதி ஃபர்சானா அஃப்ரிடி, துணிகர முதலாளி திரு பிரதீப்ஷா, தொழிலதிபர்கள் திரு அப்பாராவ் மல்லாவரபு, திரு தீப் கல்ரா, திரு பதஞ்சலி கோவிந்த் கேஸ்வானி, திரு தீபக் சேத், திரு ஸ்ரீகுமார் மிஸ்ரா மற்றும் திரு ஆஷிஷ் தவான், திரு ஷிவ் ஷரீன் போன்ற வல்லுநர்கள் உள்ளிட்ட 38 பேர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை மற்றும் குறு-சிறு-நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு நிதின் கட்காரி, ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வேளாண் & விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு நரேந்திர தோமர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு ராஜீவ் குமார், அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.