புதுதில்லியில் நடைபெற்ற சிஎஸ்ஐஆர் சொசைட்டி கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
சிஎஸ்ஐஆர் மேற்கொண்ட பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பாராட்டிய அவர், எதிர்காலத் திட்டங்களுக்கான தமது ஆலோசனைகளையும் வழங்கினார்.
மெய்நிகர் சோதனைக்கூடங்களை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதன்மூலம் நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள மாணவர்களிடம் அறிவியலைக் கொண்டு செல்ல முடியும் என்றார். அறிவியலை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டியதும், அடுத்த தலைமுறையிடம் அறிவியல் ஆர்வத்தை மேலும் வலுப்படுத்துவதும், அவசியம் என்று அவர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் இந்தியர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கான தேவைகளை நிறைவேற்ற விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், வேளாண் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டுதல், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியா எதிர்கொண்டுள்ள ஊட்டச்சத்துக்குறைபாடு போன்ற தற்கால சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிஎஸ்ஐஆர் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
விஞ்ஞானிகள் கவனம் செலுத்த தேவையான சில சவால்களாக உருவெடுத்து வரும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி சேமிப்புக்கு 5ஜி, செயற்கை நுண்ணறிவு, குறைந்த செலவில் நீடித்து உழைக்கும் பேட்டரிகள் போன்றவற்றைப் பிரதமர் பட்டியலிட்டார். உலகத் தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்க நவீன அறிவியலையும், பாரம்பரிய அறிவையும் இணைக்க வேண்டியதன் தேவையையும் அவர் வலியுறுத்தினார். புதிய கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்கு சிஎஸ்ஐஆர் அறிவியல் சமூகம், பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.