நாட்டில் கொவிட்– 19 சம்மந்தமான நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிராணவாயுவின் இருப்பு, மருந்துகள், மருத்துவ உள்கட்டமைப்பு போன்றவற்றின் நிலை குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.
நாட்டில் பிராணவாயுவின் கையிருப்பு மற்றும் விநியோகத்தை விரைவுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் பிரதமருக்கு விளக்கம் அளித்தன. மாநிலங்களுக்கு பிராணவாயுவின் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாளொன்றுக்கு 5700 மெட்ரிக் டன்னாக இருந்த திரவ மருத்துவ பிராணவாயுவின் உற்பத்தி, தற்போது (ஏப்ரல் 25, 2021 அன்று) 8922 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2021 ஏப்ரல் மாத இறுதிக்குள் திரவ மருத்துவ பிராணவாயுவின் உள்நாட்டு உற்பத்தி நாளொன்றுக்கு 9250 மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) பிராணவாயு ஆலைகளை விரைவில் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். பிஎஸ்ஏ பிராணவாயு ஆலைகளை நிறுவுவதில் தாங்கள் மாநிலங்களை ஊக்கப்படுத்தி வருவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை குறித்தும், பிராணவாயு டேங்கர்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் இந்திய விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் இருப்பை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் கொவிட் மேலாண்மையில் பணிபுரியும் அதிகாரமளிக்கப்பட்ட குழு பிரதமருக்கு விளக்கியது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். கொவிட் மேலாண்மை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் உத்திகளை மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட முகமைகள் முறையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
பொதுமக்களிடையே கொவிட் சம்பந்தமான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தகவல் தொடர்புக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு பிரதமருக்கு எடுத்துரைத்தது.
மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை செயலாளர், தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர், மருந்தகங்களின் செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநர், உயிரி தொழில்நுட்ப செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.