தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆறாவது கூட்டம் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பேரிடர்களைச் சிறப்பாகக் கையாளவும், எதிர்கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளையும் இந்த ஆணையம் தற்போது மேற்கொண்டுள்ள திட்டங்களையும் பிரதமர் ஆய்வு செய்தார்.
இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கவேண்டியதன் அவசியத்தையும்,இத்தகைய பேரழிவுகளிலிருந்து உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும் சிறப்பாக எதிர்கொள்ளவும் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.பேரிடர் மேலாண்மையில் உலகத் தரம் வாய்ந்த செயல்திறனை கொண்டுவருவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.