பூட்டான் நாட்டை சேர்ந்த ப்ருக் நியாம்ரப் ட்சோக்பா கட்சியின் தலைவர் டாக்டர். லோட்டே ஷெரிங்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். பூட்டான் நாட்டின் மூன்றாவது பொது தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெற்றதற்கும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றதற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பூட்டானில் ஜனநாயக ஒருங்கிணைப்பிற்கு முக்கிய மைல்கல்லாக அமையும் பொது தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். பகிரப்பட்டுள்ள நலன்கள் மற்றும் மதிப்புகள், நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ள இந்தியா, பூட்டான் இடையேயான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடைய இந்தியா மிகவும் முக்கியத்துவம் அளித்துவருவதாக பிரதமர் மோடி கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பொன்விழா கொண்டாட்டங்கள் கண்டு வருவதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, பூட்டானின் புதிய அரசுடன் இணைந்து பணிபுரிய இந்தியா உறுதியாக உள்ளது என்று கூறினார். பூட்டான் நாட்டு மக்கள் மற்றும் அரசின் நலன்கள் மற்றும் பூட்டானில் சமூக – பொருளாதார மாற்றங்களுக்கான தேசிய முயற்சிகளில் இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கு வருகை தருமாறு டாக்டர். லோட்டே ஷெரிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர். லோட்டே ஷெரிங் பிரதமரின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வர ஒப்புக்கொண்டார். பூட்டான் மற்றும் இந்திய மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கு இடையே உள்ள பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பு உறவினை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.