குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (19.12.2019) நடைபெற்ற தேசியக் குழுவின் 2-வது கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
இந்தக் கூட்டம் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேசியக் குழுவின் பிற உறுப்பினர்களான குடியரசுத் துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், காந்தியவாதிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். குழுவின் ஒரே வெளிநாட்டு உறுப்பினரான போர்ச்சுக்கல் பிரதமர் திரு.ஆண்டோனியோ கோஸ்டாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தேசப்பிதாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை, “மக்கள் இயக்கமாக” மாற்றுவதற்காக பிரதமரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும், செயற்குழுவின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார். தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முன்முயற்சிகளை தாமே தலைமையேற்று நடத்தும் பிரதமர், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்க பாடுபடுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மகாத்மா காந்தியின் போதனைகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கலாச்சாரத் துறையால் தொகுக்கப்பட்ட காந்தி நினைவுப் பணிகள் மற்றும் வெளியுறவுத் துறையால் தொகுக்கப்பட்ட காந்தியின் திரட்டுகள் அடங்கிய நூலை, பிரதமர் வெளியிட குடியரசுத் தலைவர் பெற்றுக் கொண்டார். வெளியுறவுத் துறையால் திரட்டப்பட்டுள்ள குறிப்புகளில், உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 126 அறிஞர்கள், காந்திஜியின் போதனைகள் மூலம் கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளனர். காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, உலகளாவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம் ஒன்றும், இந்தக் கூட்டத்தின் போது திரையிடப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர், முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள், மகாத்மா காந்தியின் சிந்தனைகளை பொதுமக்கள் பங்கேற்புடன் இணைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளைத் தயாரிக்க உதவிகரமாக இருக்கும் என்றார்.
காந்தியடிகளைப் பற்றி அறிந்து கொண்டு, அவரது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள உலக நாடுகள் தற்போது ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே மகாத்மா காந்தி மற்றும் அவரது தொலைநோக்கு சிந்தனைகள் இப்போதும் தேவைப்படுகிறது என்பதை உலகிற்கு நினைவூட்ட வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவிலும், போர்ச்சுக்கலிலும் நடைபெறும் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டுவதோடு, நேரம் இக் கூட்டத்தில் பங்கேற்க நேரம் ஒதுக்கிய போர்ச்சுக்கல் பிரதமருக்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
‘காந்தியின் 150-வது பிறந்தநாள்’ கொண்டாட்டம், ஓராண்டுக்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சி அல்ல என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். காந்திய சிந்தனைகள் மற்றும் அவரது தொலைநோக்கு கருத்துக்களை அனைத்துக் குடிமக்களும் தங்களது வாழ்வில் பின்பற்றுவதோடு, அதனை வருங்காலத்திலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் அவ்வப்போது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தாலும், ‘காந்தியின் 150-வது பிறந்தநாள்’ கொண்டாட்டங்கள், சாதாரண நிகழ்ச்சியாக அல்லாமல் சிறப்பு வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டார். இத்தகைய கொண்டாட்டங்கள், சாமானிய மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாக மாறியிருப்பதுடன் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்துக் குடிமக்களும் ‘உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்’ என செங்கோட்டையில் தாம் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதையும் பிரதமர் மீண்டும் சுட்டிக்காட்டினார். மேம்பாட்டுக்கான காந்தியடிகளின் இந்த அடிப்படைக் கொள்கை, இந்தியா வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய உதவும் என்றும் தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள 2022 ஆம் ஆண்டு வரை அனைத்துக் குடிமக்களும் இந்தக் கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவையின் 250-வது கூட்டத் தொடரின் போது, உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் பேச முன்வந்ததும், அதனை ஊக்குவித்ததும் நாட்டிற்கு பெருமிதம் அளிக்கக் கூடியது என்றும் பிரதமர் தெரிவித்தார். காந்தியின் கொள்கைகளை உலகளவில் முன்னெடுத்துச் செல்ல நாம் பாடுபடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள சாமானிய மனிதனுக்கும் தற்காலத்திற்கேற்ப மகாத்மாவின் போதனைகள் பயன்படுவதை உறுதி செய்ய பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
நாட்டிற்காக ஒருவர் தமது கடமைகளை ஆற்றுவதுடன் ஒருவருக்கொருவர் உண்மையுடனும், மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பாக உள்ளது என்பதை ஒரு மனிதன் தானாக உறுதி செய்து கொள்ள வேண்டுமென்பதில் காந்தியடிகள் நம்பிக்கை கொண்டிருந்ததையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். தமது உரையின் நிறைவாக, ஒவ்வொரு மனிதனும் காந்தியடிகளின் வழியில் செயல்பட்டு கடமைகளை உண்மையாகவும், நேர்த்தியாகவும் நிறைவேற்றினால், இந்தியாவின் கனவுகள் நிறைவேறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.