50-ஆவது ஆளுநர்கள் மாநாடு, புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (23.11.2019) நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியுடன் தொடங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் உட்பட முதன்முறையாக ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் 17 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஜல்சக்தி அமைச்சர் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது முதல் ஆளுநர்கள் மாநாடு பற்றிய நீண்ட நெடிய வரலாற்றை சுட்டிக்காட்டியதுடன், தற்போது நடைபெறும் 50 ஆவது மாநாடு, கடந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகளின் சாதனைகள் மற்றும் முடிவுகளை மதிப்பீடு செய்து, எதிர்காலத்திற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்றார்.
ஆளுநர் பதவி என்பது கூட்டாட்சி மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த கூட்டமைப்பு முறையை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை, பன்முகத் தன்மை மற்றும் பிற தேவைகளுக்கு ஏற்ப சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். தங்களது நிர்வாக கட்டமைப்பு காரணமாக யூனியன் பிரதேசங்கள், வளர்ச்சிப்பணிகளில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினவிழாவை 2022 ஆம் ஆண்டிலும், 100-ஆவது ஆண்டு நிறைவை 2047 ஆம் ஆண்டிலும் கொண்டாடவுள்ள வேளையில், அரசின் நிர்வாக இயந்திரங்களை நாட்டு மக்களிடம் மிக நெருக்கமாக கொண்டு செல்வதோடு, அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதிலும், ஆளுநர்களின் பங்களிப்பு மேலும் முக்கியமானதாக இருக்கும் என்றார். இந்தியாவின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி வரும் வேளையில், இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள சேவைகளை மனதில் கொண்டு ஆளுநர்கள் மற்றும் மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, குடிமக்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதுதான் பங்களிப்பு ஆளுகையின் உண்மையான அர்த்தத்தை பிரதிபலிக்க உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைத்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் காந்திய சிந்தனைகள் மற்றும் நன்மதிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், நம்நாட்டு இளைஞர்களிடையே தேசத்தை கட்டமைப்பதற்கான நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்க ஊக்கமளித்து உதவுமாறும், ஆளுநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது அரசியல் சாசன பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்றுவதுடன், சாமானிய மனிதனின் தேவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டார். மாநில அரசுகளுடன் இணைந்து, தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை பயன்படுத்தி, நாட்டு மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான ஷெட்யூல்டு பழங்குடியினர், சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுமாறும் ஆளுநர்களிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
சுகாதார சேவைகள், கல்வி மற்றும் சுற்றுலாத் துறை பற்றி அழுத்தமாக குறிப்பிட்ட பிரதமர், இந்த மூன்று துறைகளும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய வாய்ப்புள்ள துறைகள் என்றும் தெரிவித்தார். காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க ஆளுநர்கள் தங்களது பதவியை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பழங்குடியினர் விவகாரங்கள், வேளாண் துறை சீர்திருத்தம், ஜல்ஜீவன் இயக்கம், புதிய கல்விக் கொள்கை மற்றும் ‘வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்கான ஆளுகை’ போன்ற சிறப்பு அம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து, ஐந்து துணைக் குழுக்களாக பிரிந்து விரிவான மற்றும் புதுமையான விவாதங்களை மேற்கொள்ள இந்த மாநாட்டில் வகை செய்யப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த துணைக் குழுக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களும் விரிவாக விவாதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.