நண்பர்களே,
ஊடகவியலாளர்களே,
அதிபர் ராமோன் அவர்களையும், அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் வரவேற்கிறேன். தஜிகிஸ்தான் ஆசிய கண்டத்தின் மதிப்புமிகு நண்பன். அதிபர் ராமோனுக்கு இந்தியாவைப் பற்றி நல்ல அறிமுகம் உண்டு. அவர் இங்கு மீண்டும் வந்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. இருநாட்டு உறவு மேம்பட அவர் ஆற்றியிருக்கும் பணிகளை நாங்கள் பாராட்டுகிறோம். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வைத்திருக்கும் மரியாதை, நம்பிக்கை, பகுதிசார் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தின்மேல் இருக்கும் ஆர்வம் ஆகியவை சார்ந்தே நம் உறவு அமைந்திருக்கிறது. நம் நாடுகளும், சமூகங்களும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புடையவை. நம் மக்களிடையே நிலவிய கலாச்சார, மத மற்றும் மொழிக்கலப்பு இன்று இரு நாட்டு மக்களிடையே நிலவும் தொடர்புக்கு உறுதுணையாக இருக்கிறது.
நானும் அதிபர் ராமோனும் பயன் தரவல்ல உரையாடல்களை இன்று நிகழ்த்தினோம். ராணுவம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் இருநாட்டு உறவும் அடைந்திருக்கும் மேம்பாடுகளை மதிப்பிட்டோம். இந்தியாவும், தஜிகிஸ்தானும் பல்வேறு பாதுகாப்பு சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்து வருகின்றன. தீவிரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமேயான சிக்கலாக இல்லாமல் ஒட்டுமொத்த பகுதியிலும் வன்முறையையும், நிலையற்ற தன்மையையும் தோற்றுவிப்பதாக இருக்கிறது. எனவே தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை நம் கூட்டு செயல்திட்டங்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மத்திய ஆசிய பகுதியில் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான தஜிகிஸ்தானின் பங்கை நாங்கள் வரவேற்கிறோம். நானும், அதிபர் ராமோனும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களது நடவடிக்கைளை இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் வகைகளில் பலப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இதை பல்வேறு அடுக்குகளில் செய்ய இருக்கிறோம்:-
• இருதரப்பிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுவுவது.
• மேம்படுத்தப்பட்ட பயிற்சி, திறன் வளர்ப்பு, தகவல் பரிமாற்றம்
• பகுதிசார்ந்த, மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை நல்குதல்
நண்பர்களே,
நம் இருநாடுகளின் பொருளாதர தொடர்பை, குறிப்பாக வணிகம் மற்றும் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை இருவருமே ஒப்புக்கொண்டோம். அது சார்ந்து நீர்மின் நிலையம், தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை, உடல்நலத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பொருளாதர தொடர்புக்கு உறுதுணையாக போக்குவரத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம். ஏற்கனவே ஆஃப்கனிஸ்தான் வழியாக தஜிகிஸ்தானையு, மத்திய ஆசியாவையும் இந்தியாவுடன் இணைக்கும் சாலை, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்கும்
இதையொட்டி ஈரானின் சப்பஹார் துறைமுகத்தில் வணிக மற்றும் கடப்பு வழிகளை அமைக்க இந்தியா முயற்சி எடுக்கும். அதுமட்டுமல்லாமல் தஜிகிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகளுடனும் இணைந்து வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதை அமைப்பதிலும் இந்தியா ஈடுபட்டிருக்கிறது. அஷ்காபாத் ஒப்பந்தத்தின்படி தஜிகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் போக்குவரத்து இன்னும் மேம்படும். இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதர கூட்டமைப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் இந்தியாவும், தஜிகிஸ்ஹானும் திறன் மேம்பாடு மற்றும் நிறுவன கட்டமைப்பு பயிற்சிகளை நடத்துகின்றன. அதிபர் ராமோனும், நானும் கூட்டணியை மேலும் வலுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
அடுத்த ஆண்டும் நாம் இந்தியா-தஜிகிஸ்தான் நாடுகளிடையேயான அரசாங்க உறவின் 25ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம். நம் இருநாடுகள் இணைந்து செயலாற்றுவதற்கு தோதாக நாங்கள் தீட்டியிருக்கும் திட்டங்கள் குறித்து உற்சாகமடைகிறேன். இன்று போடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களும், நடத்தப்பட்ட பல்வேறு விவாதங்களும் இருநாடுகளுக்குமிடையிலான கூட்டணியை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன். மீண்டுமொருமுறை அதிபர் ராமோனை வருக வருக என வரவேற்கிறேன்.
நன்றி.