கம்போடிய அரசின் மேதகு பிரதமர் ஹுன் சென் அவர்களே,
மதிப்பிற்குரிய குழு உறுப்பினர்களே,
புகழுக்குரிய விருந்தினர்களே,
ஊடகத்தை சேர்ந்த நண்பர்களே,
பெரியோர்களே தாய்மார்களே,
வாழ்த்துகள்!
மீண்டும் ஒரு முறை பிரதமர் ஹுன் சென் அவர்களை வரவேற்பது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவரது இந்த அரசு முறையிலான வருகை பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின் நடைபெற்றுள்ளது.
நீங்கள் இந்தியாவை குறித்தும், இந்தியா தங்களுடன் உள்ளதையும் தாங்களாகவே நீங்கள் நன்கறிந்தாலும் பிரதமர் அவர்களே, இந்த வருகையின் மூலம் அதன் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றங்களையும் நெருங்கி காணும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள் என நான் உறுதியாக கூறுகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஆசியான் இந்தியா நினைவுகூரும் மாநாட்டில், ஆசியான்-இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வருங்காலங்களில் இந்தியா மற்றும் ஆசியான் ஒத்துழைப்பு புதிய உச்சங்களை எட்டும் வகையில், 10 ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியத் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, எனது அழைப்பினை ஏற்று, இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு எங்களை கவுரவப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமல்ல, மாநாட்டின் விவாதங்களிலும், வெளிப்பாடுகளிலும் நீங்கள் மதிப்புமிக்க பங்களிப்புகளை அளித்துள்ளீர்கள். அதற்காக எனது மனமார்ந்த நன்றி.
நண்பர்களே,
இந்தியா மற்றும் கம்போடியாவிற்கு இடையேயான பண்டைய வரலாற்று உறவு, கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில், கம்போடியாவில் ஏற்பாட்ட அரசியல் மாற்றங்களின்போது இந்தியா, அதன் பழைய நண்பன் மற்றும் அதன் மக்களோடு தோளோடு தோள் நின்று மேலும் தீவிரப்படுத்தியது.
இன்றைய சமகால தேவைகளுக்கேற்ப, அனைத்து துறைகளிலும் நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்திட வேண்டுமென்பதை பிரதமர் ஹுன் சென் ஒப்புக்கொண்டுள்ளார்
பொருளாதாரம், சமூக வளர்ச்சி, திறன் வளர்ப்பு, கலாச்சாரம், வணிகம், சுற்றுலா மற்றும் மக்களோடு மக்களுக்கான தொடர்புகள் போன்ற அனைத்து துறைகளில் கம்போடியாவுடனான தனது கூட்டை விரிவுப்படுத்திட இந்தியா விரும்புவது மட்டுமல்லாமல், அதில் உறுதியாகவும் உள்ளது.
நமது பகிரப்பட்ட பாரம்பரியம் நமது கலாச்சார உறவுகளுக்கு மிக முக்கியமானதாகும். இந்த கூட்டுறவிற்கு எடுத்துக்காட்டாக, 12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அங்கோர் வாட் கோயிலை சீரமைக்கும் பணி உள்ளது.
கம்போடியாவின் இந்த கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்ச்சிக்காவும் பங்களிப்பதற்காக இந்தியா மகிழ்ச்சியடைகிறது.
நமது மொழிகளில் பாலி மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை.
நமது வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் மிக ஆழமானது என்பதை மகிழ்ச்சிக்குரியதாகும். எனவே, பரஸ்பர சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நண்பர்களே,
நமது நண்பன் கம்போடியா கடந்த இருபதாண்டுகளில் ஆண்டிற்கு 7% உயர்ந்து துரிதமான பொருளாதார வளர்ச்சியடைவது இந்தியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. நாம் ஒரே மாதிரியான மாண்புகள் மற்றும் கலாச்சார ஒழுக்கங்களை பெற்றுள்ளதால், நமது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இயற்கையான உணர்வை நாம் பெற முடியும்.
கம்போடியாவின் சுதந்திரமான பொருளாதார கொள்கைகள் மற்றும் ஆசியான் பொருளாதார சமுதாயம் தோற்றுவித்தல் ஆகியவை கம்போடியாவில், உடல்நலம், மருந்து, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், வாகனதொழிற்சாலை மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, போன்ற துறைகளில் இந்திய முதலீடுகள் செய்வதற்கு நல்ல வாய்ப்புகளை அளித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் நமது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேலும் வளர்ச்சியடைந்து, இந்தியாவை சேர்ந்த அதிகமான முதலீட்டாளர்கள் கம்போடியாவில் லாபம் ஈட்டுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
நண்பர்களே,
கம்போடியா உடனான இந்தியாவின் உறவிற்கு வளர்ச்சி கூட்டுறவு முக்கிய பங்காகும்.
கம்போடியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய கூட்டுதாரராக இருப்பதில் இந்தியாவின் உறுதி எப்போதும் இருப்பதும், அது என்றென்றும் தொடரும்.
உடல்நலம், இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு போன்ற துறைகளில் கம்போடியா அரசின் தேவைகளுக்கேற்ப திட்டங்களுக்கு கடனுதவிகள் அளித்திட நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 5 துரித தாக்கம் அளிக்கும் திட்டங்களை கம்போடியாவில் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களை ஆண்டொன்றுக்கு 5-லிருந்து 10 ஆக உயர்த்திட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் திட்ட வளர்ச்சி நிதியை ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த நிதி, தொழிற்துறை மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்திட பயன்படுத்தப்பட உள்ளதுடன், வழங்கல் முறையை செலவை குறைக்கும்.
கம்போடியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடனான சேவைகளுக்கான வல்லமை மையத்தை நாங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
கடந்த ஐம்பதாண்டுகளாக, இந்திய தொழில்நுட்பம் & பொருளாதார கூட்டுறவுத் திட்டத்தில் இந்தியா கம்போடியாவின் முக்கிய கூட்டுதாரராக உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 1400 கம்போடிய மக்கள் திறன் வளர் பயிற்சி பெறுகின்றனர்.
இத்திட்டத்தை எதிர்காலத்திலும் நாங்கள் தொடர உள்ளதுடன், கம்போடியாவின் தேவைகளுக்கேற்ப அதை விரிவுபடுத்தவும் உள்ளோம்.
நண்பர்களே,
சர்வதேச மன்றங்களிலும் நம் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு ஆழமாக உள்ளதுடன், பல பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களிலும் நாங்கள் நம்பிக்கைக்குரிய உறவுடன் உள்ளோம்.
இந்தியா மற்றும் கம்போடியா இடையே தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்தி, சர்வதேச மன்றங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு அளிப்பது தொடரும்.
இறுதியாக, இந்தியாவின் ஒருங்கிணைந்த நண்பராகவும், மதிப்பிற்குரிய விருந்தினராகவும் இந்தியாவிற்கு வருகை புரிந்ததற்காக பிரதமர் திரு. ஹுன் சென் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் அவருடைய தங்குதல் மகிழ்ச்சிகரமாகவும், நினைவுக் கூரத்தக்கதாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும், கம்போடியா மற்றும் அதன் மக்களுடனான நமது நெருக்கமான மற்றும் பாரம்பரிய உறவுகளை வலுப்பெறச் செய்யும் வகையில், எதிர்காலத்திலும் கம்போடியா உடனான கூட்டுறவை மேலும் விரிவுபடுத்திட இந்தியா தயாராக உள்ளது என நான் உறுதி கூறுகிறேன்.