மேதகு பிரதமர் ஷின்சோ அபே அவர்களே,
மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,
ஊடக உறுப்பினர்களே,
வணக்கம்
எனது தனிப்பட்ட நண்பரான பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத்துக்கு வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச கருத்தரங்குகளின் இடையே பிரதமர் அபே-வும், நானும் பல முறை சந்தித்துள்ளோம். எனினும், இந்தியாவுக்கு அவரை வரவேற்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடன் இணைந்து சபர்மதி ஆஸ்ரமத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. இன்று நாங்கள் இருவரும் தண்டி குதிருக்கு (Dandi Kutir) சென்றோம். இன்று காலை, நாங்கள் இருவரும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்துக்கான விழாவை நடத்தினோம். ஜப்பான் ஒத்துழைப்புடன் இந்த ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மிகப்பெரிய நடவடிக்கை. இது அதிவேக ரயிலின் தொடக்கம் மட்டுமல்ல. நமது எதிர்காலத் தேவைகளை முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்த புதிய ரயில் திட்டத்தை புதிய இந்தியாவின் உயிர்ப்பாதையாக நான் கருதுகிறேன். இந்தியாவின் தடையில்லா வளர்ச்சியானது, தற்போது மிகவும் வேகமான நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பரஸ்பர நம்பிக்கை மற்றும் விசுவாசம், ஒவ்வொருவரின் நலன் மற்றும் கவலைகளை புரிந்துகொள்தல், தொடர்ந்து உயர்மட்ட அளவில் கலந்துரையாடல்கள் ஆகியவையே இந்தியா-ஜப்பான் நல்லுறவின் தனித்தன்மை ஆகும். நமது சிறப்பு பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பானது, இருதரப்பு அல்லது பிராந்திய அளவோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. சர்வதேச விவகாரங்களில் கூட நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டில், ஜப்பானுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான வரலாற்றுப்பூர்வமான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஜப்பான் மக்கள், ஜப்பான் நாடாளுமன்றம் மற்றும் குறிப்பாக பிரதமர் அபே-வுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒப்பந்தம், தூய்மையான எரிசக்தி மற்றும் வானிலை மாற்ற விவகாரங்களில் நமது ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது.
நண்பர்களே,
2016-17-ம் ஆண்டில், ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 80 சதவீதம் கூடுதலாகும். தற்போது, இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் மூன்றாவது நாடாக ஜப்பான் மாறியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாளைய பொன்னான வாய்ப்புகள் ஆகியவற்றின் மீது ஜப்பானில் எந்த அளவு நம்பிக்கை உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முதலீட்டைப் பார்க்கும்போது, இரு நாட்டு வர்த்தகம் அதிகரித்து வருவதைப் போன்று, இந்தியா-ஜப்பான் இடையே மக்களுக்கான தொடர்புகள், வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று யூகிக்க முடியும். ஏற்கனவே ஜப்பான் மக்களுக்கு, இங்கு வந்தபின் விசா பெற்றுக் கொள்ளும் வசதியை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது இந்திய அஞ்சல் துறை மற்றும் ஜப்பான் அஞ்சல் துறைக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து, குளுமை பெட்டி சேவையை (Cool Box Service) அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம், இந்தியாவில் வசித்துவரும் ஜப்பானிய மக்கள், தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை ஜப்பானிலிருந்து நேரடியாகப் பெற முடியும். அதேநேரத்தில், இந்தியாவில் அதிக அளவில் ஜப்பானிய உணவகங்களை தொடங்குமாறு ஜப்பான் தொழில் துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியா இன்று பல்வேறு மட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களை செய்து வருகிறது. இது எளிதாக தொழில் செய்வது அல்லது திறன் இந்தியா, வரி சீர்திருத்தங்கள் அல்லது இந்தியாவில் தயாரிப்போம் என அனைத்திலும் இந்தியா முழுமையான மாற்றங்களை செய்து வருகிறது. இது ஜப்பானிய வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள். நாம் செயல்படுத்திவரும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பல்வேறு ஜப்பானிய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளையும் சேர்ந்த தொழில் துறையினருடன் இன்று மாலை நடத்த உள்ள ஆலோசனையின் மூலம், நேரடிப் பலன்களை நாம் பெற உள்ளோம். ஜப்பானின் அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவித் திட்டத்தில் மிகப்பெரும் கூட்டாளியாக நாம் உள்ளோம். பல்வேறு துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இன்று கையெழுத்தான ஒப்பந்தங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் கையெழுத்தான ஒப்பந்தங்கள், இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்தக் கருத்துகளுடன், பிரதமர் அபே-வையும், அவருடன் வந்துள்ள உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
Ijyo De Gozaimas (தற்போது இவ்வளவு தான்)
Arigato Gozaimas (உங்களுக்கு நன்றி.)
மிக்க நன்றி.
Expanding the horizons of bilateral relationship.
— Raveesh Kumar (@MEAIndia) September 14, 2017
The two leaders witness the exchange of MoUs/Agreements between #IndiaJapan pic.twitter.com/OBARyOTGOy
द्धिपक्षीय संबंधों का विस्तार
— Raveesh Kumar (@MEAIndia) September 14, 2017
दोनों प्रधान मंत्रिओं के समक्ष #IndiaJapan के बीच समझौता ज्ञापनों का आदान-प्रदान हुआ pic.twitter.com/mpBDxqORkt