மேதகு அதிபர் மஹ்மோத் அப்பாஸ் அவர்களே,
பாலஸ்தீன மற்றும் இந்தியக் குழு உறுப்பினர்களே,
ஊடக நண்பர்களே, சீமான்களே சீமாட்டிகளே,
காலை வணக்கம்
இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல்முறையாக ரமல்லாவுக்கு வருகை புரிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.
அதிபர் அப்பாஸ் அவர்களே, என்னை கவுரவிக்கும் வகையில் நீங்கள் குறிப்பிட்ட வாழ்த்துகளுக்கும் நீங்கள் எனக்கும் என்னுடன் வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் அளித்த மனப்பூர்வமான மற்றும் உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிபர் அவர்களே, நீங்கள் எனக்கு பாலஸ்தீனத்தின் மிக உயரிய கவுரவத்தை எனக்கு அளித்துள்ளீர்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் மரியாதையை அளிக்கக்கூடிய விஷயமாகவும் இந்தியா மீதான நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தின் குறியீடாகவும் அமைகிறது.
இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே உள்ள பழைமையான மற்றும் வலிமையான வரலாற்று உறவுகள் காலத்தைக் கடந்ததாக உள்ளது. பாலஸ்தீனத்திற்கான நன்மைக்கு எங்களது தொடர்ந்த மற்றும் நிலையான ஆதரவு எங்களது வெளிநாட்டுக் கொள்கையில் முன்னிலையில் உள்ளது.
எனவே இந்தியாவின் மிகவும் பழைமையான நண்பரான அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் இணைந்து ரமல்லாவில் நிற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மே மாதம் அவரது இந்தியப் பயணத்தின் போது அவரை வரவேற்றதை கவுரவமாக கருதுகிறேன். நமது நட்பையும் இந்தியாவின் ஆதரவையும் புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது இந்தப் பயணத்தின் போது அபு ஓமர் கல்லறையில் எனது அஞ்சலியை செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரது காலத்தில் வாழ்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். பாலஸ்தீனிய போராட்டத்தில் அவரது பங்களிப்பு அதற்கு முன் இல்லாத ஒன்றாகும். அபு ஓமர் இந்தியாவின் மதிக்கத்தக்க நண்பராகவும் திகழ்ந்தார். அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாகும். அபு ஓமருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியை நான் மீண்டும் செலுத்துகிறேன்.
சகோதர சகோதரிகளே,
பாலஸ்தீனம் நிலையான சவால்கள் மற்றும் துயரங்களை சந்தித்தபோது பாலஸ்தீன மக்கள் காட்டிய தைரியம் மற்றும் விடாமுயற்சி குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிடத்தக்க போராட்டத்திற்குப் பின்னர் பெறப்பட்ட முன்னேற்றத்தை தடுத்த மற்றும் நன்மைகளை ஆபத்தில் சிக்க வைத்த நிச்சயமற்ற சூழல் மற்றும் பாதுகாப்பு இன்மை நிலவியபோது அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள நீங்கள் பாறை போன்ற உறுதியை வெளிப்படுத்தினீர்கள்.
இந்தக் கடினங்கள் மற்றும் சவால்களுக்கு எதிராக நீங்கள் அடைந்த முன்னேற்றம் போற்றுதலுக்குரியதாகும். சிறந்த எதிர்காலத்திற்காக நீங்கள் உங்களது முயற்சிகளின் மீது காட்டிய உணர்வு மற்றும் நம்பிக்கையை நாங்கள் போற்றுகிறோம்.
பாலஸ்தீனத்தின் தேச கட்டமைப்பு முயற்சிகளில் மிகவும் பழைமையான கூட்டணியாக இந்தியா உள்ளது. பயிற்சி அளித்தல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்ட உதவி மற்றும் பட்ஜெட் ரீதியான ஆதரவு ஆகிய துறைகளில் நம்மிடையே ஒத்துழைப்பு உள்ளது.
நமது புதிய முயற்சியின் பகுதியாக ரமல்லாவில் நாங்கள் தொழில்நுட்ப பூங்கா திட்டம் ஒன்றைத் தொடங்கி அது தற்போது கட்டுமான நிலையில் உள்ளது. அது நிறைவடைந்த பிறகு அந்த நிறுவனம் வேலை வாய்ப்புத் திறன்களையும் சேவைகளையும் விரிவுபடுத்தும் மையமாக இருக்கும்.
ரமல்லாவில் ராஜதந்திர நிறுவனம் ஒன்றை அமைப்பதிலும் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் இளம் தூதர்களுக்கு உலகத்தரமான பயிற்சி நிறுவனமாக இது உருவெடுக்கும்,
நமது திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு நீண்ட கால மற்றும் குறுகிய கால பாடத்திட்டங்களில் பரஸ்பர பயிற்சியை உள்ளடக்கியதாகும். நிதி, நிர்வாகம், ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய கல்வி நிறுவனங்களில் பாலஸ்தீனர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி ஊக்கத்தொகை சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது நாங்கள் எங்களது வளர்ச்சி ஒத்துழைப்பை நாங்கள் விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலஸ்தீனத்தில் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் மைய திட்டங்களிலும் அச்சகம் ஒன்றிலும் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும்.
சக்திவாய்ந்த பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் படிக்கற்களே இந்தப் பங்களிப்பு என நாங்கள் கருதுகிறோம்.
இருதரப்பு மட்டத்தில் அமைச்சக மட்டத்திலான கூட்டு ஆணைய சந்திப்புகளின் மூலம் நமது உறவை மேலும் ஆழப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாலஸ்தீன இளைஞர் குழுவினரின் பரிமாற்றம் முதல் முறையாக நடைபெற்றது. நமது இளைஞர்கள் மற்றும் அவர்களது திறன் மேம்பாட்டிலும் உறவிலும் செய்யப்படும் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு பகிர்ந்து கொள்ளப்பட்ட முன்னுரிமையாகும்.
பாலஸ்தீனத்தைப் போலவே இந்தியாவும் ஓர் இளமையான நாடு. பாலஸ்தீன இளைஞர்கள் மீதான நமது விருப்பங்கள் இந்திய இளைஞர்கள் மீது நாம் கொண்ட விருப்பங்களை போன்றது என்பது இது முன்னேற்றம், வளம் மற்றும் தன்னம்பிக்கைக்கான வாய்ப்புகளை அளிக்கிறது. அவர்கள் நமது எதிர்காலம் மற்றும் நமது நட்பின் வாரிசுகள்.
இந்த ஆண்டு நமது இளைஞர்கள் பரிமாற்றத்திற்கான எண்ணிக்கை 50லிருந்து 100 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதர சகோதரிகளே,
இன்று நடைபெற்ற ஆலோசனையின் போது பாலஸ்தீன மக்களின் விருப்பங்களை இந்தியா தொடர்ந்து கவனத்தில் கொள்ளும் என்று அதிபர் அப்பாசிடம் நான் மீண்டும் உறுதி அளித்தேன்.
பாலஸ்தீனம் விரைவில் அமைதியான சூழ்நிலை கொண்ட இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக உருவாகும் என இந்தியா நம்புகிறது.
பாலஸ்தீனத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் அமைதி நடைமுறை குறித்தும் நிலவும் சமீபத்திய பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அதிபர் அப்பாசும் நானும் இன்று ஆலோசனை நடத்தினோம்.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியும் நிலையான தன்மையும் நிலவும் என இந்தியா பெரிதும் நம்புகிறது.
பாலஸ்தீன பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு பேச்சுகள் மற்றும் புரிதல்களில் உள்ளது என்றும் அதன் மூலமாகவே அமைதிக்கான பாதையை எட்டமுடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
தீவிர ராஜதந்திரம் மற்றும் அதிகார வரம்புகள் மட்டுமே வன்முறை மற்றும் வரலாற்றுச் சுமைகளில் இருந்து சுதந்திரம் அடைய உதவும்.
அது சுலபமானது அல்ல என்றும் நமக்குத் தெரியும். சுமை அதிகமாக உள்ளது என்பதால் நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேதகு அதிபர் அவர்களே, உங்களது சிறப்பான உபசரிப்புக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
125 கோடி இந்தியர்களின் சார்பாக பாலஸ்தீன மக்களின் முன்னேற்றம் மற்றும் வளத்திற்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
ஷுகாரன் ஜஜீலான்!