டென்மார்க் பிரதமர் மேன்மைதங்கிய திருமதி மெட்டே ஃப்ரடெரிக்செனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இரு தலைவர்களும் நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா-டென்மார்க் பசுமை உத்திப் பங்களிப்பின் முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். புதுப்பிக்கவல்ல எரிசக்தியில், குறிப்பாக கடற்கரை காற்று சக்தி, பசுமை ஹைட்ரஜனில் அதேபோல் திறன் மேம்பாடு, சுகாதாரம், கப்பல் போக்குவரத்து, தண்ணீர் மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட பலவற்றில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
நமது முக்கியமான திட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள டென்மார்க் நிறுவனங்களின் ஆக்கபூர்வ பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். டென்மார்க்கில் இந்திய நிறுவனங்களின் ஆக்கபூர்வ பங்களிப்பைப் பிரதமர் ஃப்டெரிக்சென் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கு இடையே மக்களுடனான உறவுகள் விரிவடைந்திருப்பதைப் பாராட்டிய இரு தலைவர்களும் குடிபெயர்தல் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு குறித்த நகல் பிரகடனத்தை வரவேற்றனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த கருத்துக்களையும் இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.
தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை ஏற்கப்பட்டது