அன்பார்ந்த நண்பர்களே!
கலாஸ்நிகோவ் துப்பாக்கி தயாரிப்பதற்கான ரஷ்ய-இந்திய நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
ரஷ்யா-இந்தியா இடையிலான சிறப்பு வாய்ந்த நீடித்த நட்புறவின் முக்கியமான துறைகளில் ஒன்றாக, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. எங்களது இந்திய நண்பர்களுக்கு, நம்பகமான உயர்தரம் வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை, 70 ஆண்டு காலத்திற்கும் மேலாக நாங்கள் வழங்கி வருகிறோம். ரஷ்ய ஒத்துழைப்புடன் சுமார் 170 ராணுவ மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய கூட்டு நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கலாஸ்நிகோவ் – 200 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதுடன், முழு அளவிலான உள்நாட்டு உற்பத்தியை எட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, இது போன்ற சிறிய ரக ஆயுதங்களை அதிநவீன ரஷ்ய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கும் வாய்ப்பு இந்திய பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நான் இந்தியாவில் அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, எனது நண்பர் திரு. மோடியும், நானும் கலாஸ்நிகோவ் துப்பாக்கி உற்பத்தியை இந்த நாட்டிலேயே தொடங்குவதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதற்காக இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளாக அவை கையெழுத்தானது. அந்த வகையில், ரஷ்ய-இந்திய நிபுணர்கள் உட்பட, இந்த திட்டம் முறையாக நிறைவேற ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன். நாட்டின் பொருளாதாரத்தை அறிவியல் மற்றும் தொழில் ரீதியாக மேலும் முன்னெடுத்துச் செல்லவும், தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதோடு, தொழில் கல்வி மற்றும் பணியாளர் பயிற்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக இது அமையும். இந்த தொழிற்சாலை இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் ஆக்கபூர்வ ஒத்துழைப்புக்கு மற்றொரு உதாரணமாகவும் திகழும்.
உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.