எனதருமை குடிமக்களே,
இந்த செங்கோட்டையிலிருந்து உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நமது நாடு கிருஷ்ண ஜெயந்தியோடு கூடவே சுதந்திர தினத்தையும் கொண்டாடுகிறது. நம்மிடையே பல பால கன்னிகைகளையும் நான் இங்கே காண்கிறேன். சுதர்ஷன் சக்ரதாரி மோகனிலிருந்து துவங்கி சக்ரதாரி மோகன் வரை கலாச்சார, வரலாற்றுப் பாரம்பரியம் படைத்த பெருமை கொண்டவர்களாக நாம் இருக்கிறோம்.
இந்தச் செங்கோட்டையிலிருந்து, நமது 125 கோடி நாட்டுமக்களின் சார்பில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக, நமது நாட்டின் பெருமை, சீர்மை ஆகியவற்றுக்காக ஆழ்ந்த துயரங்களை அனுபவித்து, எண்ணற்ற தியாகங்களை செய்து, தங்களின் உயிரையும் தியாகம் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது வந்தனத்தைத் தெரிவித்து, தலைவணங்குகிறேன்.
சில நேரங்களில் இயற்கை பேரழிவுகள் நமக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகின்றன. நல்ல பருவமழை நாட்டின் வளத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. எனினும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக, சில நேரங்களில் அது இயற்கைப் பேரழிவாக மாறுகிறது. சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளும் இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டன. மேலும் மருத்துவமனை ஒன்றில் நமது அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தன. இந்த நெருக்கடியான, துயரம் நிரம்பிய தருணத்தில் நமது 125 கோடி குடிமக்களும் அவர்களின் தோளோடு தோள் நிற்கின்றனர். அனைவரின் நலனையும் உறுதிப்படுத்த நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம் என்று நெருக்கடியான இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
எனதருமை மக்களே, சுதந்திர இந்தியாவிற்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகும். கடந்த வாரம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடினோம். சம்பரான் சத்தியாக்கிரகம், சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையும் இந்த ஆண்டு நாம் கொண்டாடவிருக்கிறோம். ‘ சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்ற லோகமான்ய திலகரின் அறைகூவலின் நூற்றாண்டும் இந்த ஆண்டில்தான். கணேஷ் திருவிழாவின் 125வது ஆண்டுவிழாவும் இந்த ஆண்டில்தான் நடைபெறவுள்ளது.
கணேஷ் திருவிழாவின் மூலமாக மக்களை அணிதிரட்டத் துவங்கிய நிகழ்வின் 125வது ஆண்டுவிழாவிற்கான நேரமாகவும் இது உள்ளது. நாட்டின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்கவும் அது தூண்டியது. 1942 முதல் 1947 வரையிலான காலத்தில் நமது நாட்டு மக்களின் கூட்டான உறுதிப்பாடு இந்த ஐந்தாண்டு காலத்திற்குள்ளேயே பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி செய்தது. 70வது சுதந்திர தினத்திலிருந்து 75 வது சுதந்திர தினமான 2022 வரையான ஐந்தாண்டு காலத்தில் அதே போன்ற உறுதிப்பாட்டை நாம் இப்போதிலிருந்தே வெளிப்படுத்த வேண்டும்.
75வது சுதந்திர தினத்தை எட்டுவதற்கு நம்மிடம் இப்போது ஐந்தாண்டுகள் உள்ளன. ஒன்றுபட்ட உறுதி,. வலிமை, உறுதிப்பாடு ஆகியவற்றோடு நமது மகத்தான தேசபக்தர்களை நினைவு கூர்வது, 2022ஆம் ஆண்டிற்குள் அவர்களின் கனவுகளை உருவாக்க நமக்கு உதவி செய்யும். எனவே, புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் நாம் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நமது நாட்டின் 125 கோடி குடிமக்களின் கூட்டான உறுதிப்பாடு, கடின உழைப்பு, தியாகம், பற்றுறுதி ஆகியவற்றின் சக்தியை நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். பகவான் கிருஷ்ணர் மிகவும் பலம் பொருந்தியவர்தான். என்றாலும் மாடு மேய்ப்பவர் தன் கொம்புகளுடன் அவரது உதவிக்கு வந்த பிறகுதான் அவர்களால் கோவர்தன கிரியை தூக்க முடிந்தது. ராம பிரான் இலங்கைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, வானர சேனையான குரங்குகள் அவரது உதவிக்கு வந்தன. ராமசேது கட்டப்பட்டது; ராமபிரானால் இலங்கையை அடைய முடிந்தது. அதன் பிறகு, பஞ்சையும் ராட்டையையும் வைத்துக் கொண்டு விடுதலை என்ற பொன்னாடையை நெய்வதற்கான உறுதிப்பாட்டை தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வந்தார்.
நம் நாட்டு மக்களின் கூட்டான உறுதிப்பாடும் வலிமையுமே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. இதில் யாருமே சிறியவர்களோ, பெரியவர்களோ அல்ல. மாற்றத்தின் சின்னமாக மாறிய அணிலின் கதை என்றும் நம் மனதில் நீங்காமல் உள்ளது. எனவே, இந்த 125 கோடி மக்களிடையே யாருமே பெரியவர்களோ, சிறியவர்களோ அல்ல என்பதை, நம்மில் ஒவ்வொருவருமே சமமானவர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த இடத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்தாலும், நம்மில் ஒவ்வொருவருமே, புதியதொரு உறுதிப்பாட்டுடன், புதியதொரு உற்சாகத்துடன், புதியதொரு வலிமையுடன் முயற்சி செய்தோமெனில், நமது கூட்டான வலிமையின் மூலம் நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டுவிழாவான 2022க்குள் நமது நாட்டின் தோற்றத்தையே நம்மால் மாற்றி விட முடியும். அது பாதுகாப்பான, வளமான, வலிமையான புதிய இந்தியாவாக இருக்கும். அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குகின்ற, உலக அரங்கில் நாட்டில் புகழையும், பெருமையையும் கொண்டு வருவதில் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கியமான பங்கினை வகிக்கும் புதிய இந்தியாவாக அது இருக்கும்.
விடுதலைக்கான நமது இயக்கம் நமது உணர்வுகளோடு இணைந்த ஒன்றாகும். விடுதலைக்கான இயக்கம் நடைபெற்று வந்த காலத்தில் கல்வி கற்பிப்பதில் ஈடுபட்டுவந்த ஆசிரியர், நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர், உழைத்துக் கொண்டிருந்த உழைப்பாளி ஆகிய அனைவருமே தாங்கள் செய்து வரும் செயல் எதுவானாலும் அது நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பதாகவே இருக்கிறது என்பதை நெஞ்சார உணர்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் நாம் நன்றாகவே உணர்ந்துள்ளோம். இந்தக் கருத்துதான் நமது வலிமைக்கான மிகப்பெரும் ஆதாரமாக இருந்தது. வீட்டில், ஒவ்வொரு நாளுமே உணவு தயாரிக்கப்படுகிறது. என்றாலும், கடவுளுக்குப் படைக்கப்படும்போதுதான் அது ‘பிரசாதம்’ என்ற பெயரைப் பெறுகிறது.
நாம் இப்போதும் வேலை செய்து வருகிறோம். என்றாலும், நமது தாய் நாட்டின் பெருமைக்காக, நமது தாய்நாட்டின் புனிதத்திற்காக, நமது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவதற்காக, நமது சமூக அமைப்பை முறையானதாக ஆக்குவதற்கு என்ற உணர்வுடன் நாம் அதைச் செய்யும்போது, நமது நாட்டின் மீதான உணர்வுடன் நமது கடமைகளை நிறைவேற்றும்போது, நமது நாட்டின் மீதான பற்றுதல் உணர்வுடன் அதைச் செய்யும்போது, நமது நாட்டிற்கு அதை அர்ப்பணிக்கிறோம் என்ற உணர்வுடன் நமது வேலையைச் செய்யும்போது, நமது சாதனைகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்த உணர்வோடுதான் நாம் முன்னே அடியெடுத்து வைக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் தேதி சாதாரணமானதொரு நாளல்ல. இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் 18 வயதை நெருங்கத் துவங்குவர். இவர்களைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு அவர்களின் வாழ்வில் மிகவும் தீர்மானகரமான ஆண்டு ஆகும். 21ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் விதியை உருவாக்குபவர்களாக அவர்கள் இருக்கப் போகின்றனர். இந்த இளைஞர்கள் அனைவரையும் நான் மனமார வரவேற்பதோடு, அவர்களை வாழ்த்துகிறேன்; எனது வணக்கங்களையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. பெருமைமிக்கதொரு நாடு வளர்ச்சிக்கான அதன் பயணத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டுமென்று உங்களை அழைக்கிறது.
எனதருமை குடிமக்களே,
குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபோது, உன்னுடைய எண்ணங்கள், நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உனது இலக்குகளை உன்னால் அடைய முடியும் என அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பதிலளித்தார். நம்மிடம் வலுவானதொரு உறுதிப்பாடு உள்ளது. பிரகாசமானதொரு இந்தியாவை உருவாக்குவதென நாம் உறுதிபூண்டுள்ளோம். நம்பிக்கையற்றதொரு சூழலில் வளர்ந்த நாம் விரக்தி உணர்வை மறுதலித்து விட்டு, இப்போது நம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல வேண்டும்.
‘நடப்பது நடக்கட்டும்’ என்ற போக்கை நாம் கைவிட வேண்டும். ‘மாற்றத்தைக் கொண்டு வர முடியும்’ என்றே நாம் நினைக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில் இத்தகைய போக்குதான் நமக்கு உதவி செய்யும். தியாகத்துடனும், கடின உழைப்புடனும், எதையாவது செய்வது என்ற உறுதிப்பாடுடன், அதைச் செய்வதற்கான திறமையும், தேவையான ஆதாரங்களும் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். அவ்வாறெனில், மிகப்பெரியதொரு மாற்றம் உருவாகும்; நமது உறுதிப்பாடு சாதனையாக உருவெடுக்கும்.
சகோதர, சகோதரிகளே,
நமது நாட்டு மக்கள் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வது இயற்கையான ஒன்றுதான். நமது நாடு, நமது ராணுவம், நமது துணிவான நெஞ்சங்கள், நமது சீருடையணிந்த படைகள், அது எந்தப் படையாக இருந்தாலும் சரி, ராணுவமோ, விமானப் படையோ அல்லது கடற்படையோ, சீருடையணிந்த படைகள் அனைத்துமே, எப்போது களத்தில் இறங்கச் சொன்னாலும், தங்களின் வீரத்தையும், தங்கள் வலிமையையும் நிரூபித்து வந்துள்ளன. உயரிய தியாகத்தைச் செய்வதிலும் நமது தீரமிக்க நெஞ்சங்கள் எப்போதும் தயங்கியதில்லை. இடதுசாரி தீவிரவாதமோ, பயங்கரவாதமோ, நாட்டிற்குள் ஊடுருபவர்களோ, நாட்டிற்குள் பிரச்சனையைத் தூண்டிவிட முயற்சிக்கும் சக்திகளோ, அது யாராக இருந்தாலும், நமது நாட்டின் சீருடையணிந்த படையினர் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். துல்லியமான தாக்குதலை நாம் மேற்கொண்டபோது, இந்தியாவின் திறமை, வலிமையைப் பற்றி உலகம் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.
எனதருமை குடிமக்களே,
இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களின் முன்னுரிமை ஆகும். அது நமது கடற்கரையோரப் பகுதியாக இருந்தாலும் சரி, நமது எல்லைப் பகுதியாக இருந்தாலும் சரி, நமது விண்வெளிப் பகுதியோ அல்லது இணைய வெளியாக இருந்தாலும் சரி, நமது நாட்டிற்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் துடைத்தெறிய நமது சொந்தப் பாதுகாப்பையும் வலிமையையும் உறுதிப்படுத்தும் தகுதி பெற்றதாகவும் இந்தியா உள்ளது.
எனது பேரன்புக்குரிய குடிமக்களே,
நாட்டைக் கொள்ளையடித்த, ஏழைகளைக் கொள்ளையடித்தவர்களால் இன்று அமைதியாகத் தூங்க முடியவில்லை. இதன் விளைவாக, கடுமையாக உழைக்கின்ற, நாணயமானவர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தனது நேர்மை மதிக்கப்படுகிறது என்று இப்போது நாணயமானவர்கள் உணரத் துவங்கியுள்ளனர். நேர்மையின் விழாவைத்தான் நான் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாணயமற்ற தன்மைக்கு எவ்வித இடமும் இல்லை. இதுதான் நமக்கு புதியதொரு நம்பிக்கையை அளிக்கிறது.
பினாமி சொத்துக்களுக்கு எதிரான சட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே எவ்வித அசைவுமின்றிக் கிடந்தது. இப்போது, பினாமி சொத்துக்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே, ரூ. 800 கோடி மதிப்புக்கும் மேலான பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போதுதான், இந்த நாடு நேர்மையான நபர்களுக்கானது என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் உருவாகிறது.
நமது பாதுகாப்புப் படையினருக்கான ‘ஒரு பதவி – ஒரே ஓய்வூதியம்’ என்ற கொள்கை 30-40 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றிக் கிடந்தது. நமது அரசு அதை அமலாக்கியது. நமது வீரர்களின் விருப்பங்களை நாம் நிறைவேற்றும்போது, அவர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது; நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் உறுதிப்பாடும் பல மடங்கு அதிகரிக்கிறது.
நமது நாட்டில் பல மாநிலங்களும் ஒரு மத்திய அரசும் உள்ளன. ஜிஎஸ்டி ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சி உணர்வை வெளிப்படுத்துகிறது. போட்டி மனப்பாங்குடன் கூடிய ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சிக்கு புதியதொரு வலிமையையும் அது வழங்கியுள்ளது. ஜிஎஸ்டியின் வெற்றிக்கு அதை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கடினமான உழைப்பே காரணமாகும். தொழில்நுட்பம் அதை அற்புதமான ஒன்றாக சித்தரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஜிஎஸ்டியை நம்மால் கொண்டுவர முடிந்தது குறித்து உலகமே வியப்படைந்துள்ளது. இது நமது திறமையை பிரதிபலிப்பதோடு, நமது எதிர்காலச் சந்ததியினர் மீதான நம்பிக்கையை வளர்க்கவும் உதவியுள்ளது.
புதிய முறைகள் உருவாகி வருகின்றன. இன்று இரண்டு மடங்கு வேகத்தில் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்வே பாதைகள் போடப்படுகின்றன. நாடு விடுதலை பெற்ற பிறகும் கூட இதுவரையில் இருளில் மூழ்கிக் கிடந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 29 கோடி மக்களுக்கான வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் வளத்திற்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கும் மேற்பட்ட தாய்மார்களும் சகோதரிகளும் இப்போது விறகுகளைக் கொண்டு சமையல் செய்வதில்லை; அவர்கள் இப்போது சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். ஏழைகளான ஆதிவாசிகள் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை பெற்றுள்ளனர். வளர்ச்சியின் கடைக்கோடியில் உள்ள மனிதரும் கூட இப்போது பொது வெளியில் இணைந்திருக்கிறார். நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகிறது.
ரூ. 8 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கடன்கள் எந்தவித ஈட்டுறுதியும் இன்றி சுய வேலைவாய்ப்பிற்காக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கேயென ஒரு வீட்டை கட்ட விரும்பும்போது, குறைந்த வட்டி விகிதத்துடன் அவர் கடன் பெறுகிறார். இந்த வகையில், நாடு முன்னேறிச் செல்வதோடு, மக்களும் இந்த இயக்கத்தில் இணைந்து கொள்கின்றனர்.
காலம் இப்போது மாறியுள்ளது. நேர்முகத் தேர்வு என்ற நடைமுறையை கைவிடுவது என்பதைப் போன்று, தான் சொல்கின்ற அனைத்தையும் செய்வது என்பதில் அரசு உறுதியோடு உள்ளது.
தொழிலாளர் நலப் பிரிவில் மட்டுமே, சிறியதொரு வர்த்தகர் 50-60 படிவங்களை நிரப்பித் தர வேண்டிய நிலை இருந்தது. அதை வெறும் 5-6 படிவங்களாகச் சுருக்கியதன் மூலம் நாங்கள் அதை மேலும் வசதியானதாகச் செய்துள்ளோம். நிர்வாகச் செயல்முறையை எளிமைப்படுத்துவதன் மூலம் சிறந்த நிர்வாகத்தை வழங்குவது குறித்து, இதைப் போன்ற பல சம்பவங்களை என்னால் எடுத்துக் கூற முடியும். இதை வலியுறுத்துவதன் மூலம் விரைவாக முடிவெடுப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். எனவேதான் எமது நிர்வாகம் குறித்து 125 கோடி நாட்டு மக்களால் நம்பிக்கை கொள்ள முடிகிறது.
எனதன்பிற்குரிய நாட்டு மக்களே,
உலகம் முழுவதிலும் இன்று இந்தியாவின் தகுதி உயர்ந்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் தனியாக இல்லை என்பதை அறியும்போது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். உலகின் பல நாடுகளும் இந்த விஷயத்தில் நம்மை உயிர்ப்பான வகையில் ஆதரித்து வருகின்றன.
ஹவாலாவாக இருக்கட்டும்; அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற வேறு எந்த விஷயமாக இருக்கட்டும், இவை குறித்த முக்கிய தகவல்களை வழங்கி உலக சமூகம் நமக்கு உதவி வருகிறது. இந்த விஷயத்தில் நம்மோடு ஒன்றிணைந்து, நமது திறமையை அங்கீகரிக்கும் நாடுகள் அனைத்திற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், அதன் வளம், அந்த மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு மட்டுமல்ல; பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் நம் அனைவருக்குமே பொறுப்புண்டு. ஒரு காலத்தில் சொர்க்கமாக விளங்கிய அந்த மாநிலத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நாம் உறுதி பூண்டுள்ளோம்.
காஷ்மீர் குறித்து வீரவசனங்களும் அரசியலும் இருந்துவந்துள்ளன. மிகச் சிலரால் பரப்பி விடப்படும் பிரிவினை வாதத்திற்கு எதிரான போரில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்த எனது நம்பிக்கையில் நான் மிகவும் தெளிவாகவே உள்ளேன். வசவுகளை அள்ளி வீசுவதாலோ அல்லது துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாலோ இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடமுடியாது. அனைத்துக் காஷ்மீரிகளையும் அணைத்துக் கொள்வதன் மூலமே அதைத் தீர்த்து வைக்க முடியும். இதுதான் 125 கோடி இந்தியர்களின் பாரம்பரியமும் கூட. எனவே வசவுகளோ, குண்டுகளோ அல்ல, அனைவரையும் அணைத்துக் கொள்வதன் மூலமே மாற்றம் உருவாகும். இந்த உறுதியுடன் தான் நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகள் குறித்து மென்மையான அணுகுமுறை என்ற பேச்சே கிடையாது. பொதுவெளியில் வந்து இணையுமாறு நாம் தீவிரவாதிகளை கேட்டுக் கொண்டு வருகிறோம். ஜனநாயகம் அனைவருக்குமே சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. உரிமைகளும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும். பொதுவெளியில் இருப்பதன் மூலம் மட்டும் அதற்கு உயிரூட்ட முடியும்.
இந்தப் பகுதிகளில் இருந்து எண்ணற்ற இளைஞர்களை அணிதிரட்டிய இடதுசாரி தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்பு படையினரின் முயற்சிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
பாதுகாப்புப் படைகள் நமது எல்லைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. வீர தீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவர்களின் துணிவு குறித்த விவரங்களை வழங்கும் இணைய தளம் ஒன்றை இந்திய அரசு இன்று துவங்குகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த துணிவு நிரம்பிய நெஞ்சங்கள் பற்றிய முழு விவரங்களையும் வழங்கும் நோக்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி படைத்த இணைய தளம் ஒன்றும் துவங்கப்படுகிறது. இவர்கள் செய்த தியாகங்கள் குறித்த செய்தி நமது இளம் தலைமுறையினருக்கு நிச்சயமாக ஊக்கமளிக்கும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டில் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். கருப்புப் பணத்திற்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். தொழில்நுட்பத்தின் தலையீட்டுடன், அரசு அமைப்புடன் ஆதார்-ஐ இணைக்க நாங்கள் மெதுவாக முயற்சி செய்து வருகிறோம். இந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த மாதிரியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பாராட்டுவதோடு, அதை ஆய்வு செய்தும் வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் வாழும் சாதாரண மனிதர் கூட தனது பொருட்களை அரசிற்கு சப்ளை செய்ய முடியும். இதற்கிடையே அவர்களுக்கு எவ்வித இடைத்தரகரும் தேவையில்லை. இந்த இணைய தளத்தின் மூலமாகவே அரசு தனக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. பல்வேறு மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
சகோதர, சகோதரிகளே,
அரசின் திட்டங்களை அமல்படுத்துவதும் இப்போது வேகம்பிடித்துள்ளது. வேலை தாமதமாகும்போது, அந்தத் திட்டம் மட்டுமே தாமதமாவதில்லை. இதில் செலவாகும் பணம் மட்டுமே விஷயமல்ல. ஒரு வேலை நிறுத்தப்படும்போது, ஏழைக்குடும்பங்கள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு நம்மால் ஒன்பதே மாதங்களில் சென்றடைந்துவிட முடியும். அதைச் செய்து முடிக்கும் திறமை பெற்றவர்களாக நாம் இருக்கிறோம்.
அரசின் திட்டங்களை நான் ஒவ்வொரு மாதமும் பரிசீலனை செய்கிறேன். குறிப்பிட்ட ஒரு திட்டம் எனது கவனத்திற்கு வந்தது. அது 42 வருட கால திட்டம். 70-72 கிலோ மீட்டர் நீளத்திற்கு இருப்புப்பாதை போடுவதுதான் அந்தத் திட்டம். என்றாலும் அது கடந்த 42 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி செயலிழந்து கிடக்கிறது.
எனதருமை சகோதர, சகோதரிகளே,
ஒன்பது மாத காலத்திற்குள் செவ்வாய் கிரகத்தையே சென்றடையும் திறமை கொண்டதாக ஒரு நாடு இருக்கும்போது, 42 ஆண்டுகளாக 70-72 கிலோமீட்டர் நீள இருப்புப்பாதையை போட அதனால் எப்படி முடியாமல் போகும்? இத்தகையவைதான் ஏழைகளின் மனதில் சந்தேகங்களை உருவாக்குவதாகும். இவை அனைத்தையும் நாம் இப்போது எங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். பூமி தொடர்பான தொழில்நுட்பமோ அல்லது விண்வெளி தொடர்பான தொழில்நுட்பமோ, மாற்றத்தைக் கொண்டுவர இத்தகைய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் இணைப்பதற்கு நாங்கள் முயற்சித்துள்ளோம்.
யூரியா, கெரசின் ஆகிய பொருட்களின் விஷயத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த காலத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். மாநில அரசுகள் தம்பியைப் போல் மத்திய அரசினால் அண்ணனின் தோரணையில் நடத்தப்பட்டன. நான் நீண்ட காலத்திற்கு ஒரு முதலமைச்சராக இருந்திருக்கிறேன். நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் முக்கியத்துவம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். மாநில முதல்வர்கள், மாநில அரசுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எனக்குத் தெரியும். எனவேதான் நாங்கள் ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் வழங்கினோம். இப்போது நாங்கள் போட்டித் தன்மை நிரம்பிய ஒத்துழைப்பு மிக்க கூட்டாட்சியை நோக்கி நகரத் துவங்கியுள்ளோம். அனைத்து முடிவுகளையுமே நாங்கள் ஒன்றாக அமர்ந்து எடுப்பதையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
தொடரும்