எனதருமை சக குடிமக்களே,
இன்று நாள் முழுவதும் நான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தேன். தில்லியில் வந்து இறங்கியதும், உங்கள் அனைவருடனும் நேரடியாகப் பேச வேண்டும்; கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல ஆண்டுக்கால வரலாறாக நீடித்து வந்த முக்கியமான ஒரு பிரச்சனையின் மீது தனது தீர்ப்பை வழங்கியது.

இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் தினமும் கேட்கவேண்டும் என்று நாடு முழுவதுமே விரும்பியது. அவ்வாறே நடக்கவும் செய்தது. அதன் விளைவுதான் இன்று வெளியான அதன் தீர்ப்பு. பல பத்தாண்டுகளாக நீடித்து வந்த நீதிமன்ற செயல்பாடு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

நண்பர்களே,

இந்தியாதான் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது உலகம் முழுவதற்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். நமது ஜனநாயகம் எவ்வளவு உயிர்த்துடிப்பானது; வலிமையானது என்பதையும் இன்று உலகம் தெரிந்து கொண்டது. இன்று வெளியான தீர்ப்பை நாடு முழுவதிலும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு மதத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். இந்தியாவின் காலம் காலமான பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியங்கள் ஆகியவற்றோடு உள்ளீடாக இருந்துவரும்சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடுதான் இந்தப் பிரதிபலிப்பு.

சகோதர, சகோதரிகளே,

இந்தியாவிற்கே உரித்தான தனித்தன்மைகள் குறித்து எல்லோருக்குமே நன்கு தெரியும். அதுதான் பன்முகத்தன்மையின் ஒற்றுமையைக் காண்பது. இந்த உணர்வு இன்று மிகத் தெளிவாகவே தென்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பண்பாட்டை எவர் ஒருவர் விரும்பினாலும் எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். இன்றைய தினம் மகத்தானதொரு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டப்படும்.

நண்பர்களே,

இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு பொன்னாள் ஆகும்.

இந்தப் பிரச்சனை குறித்த விஷயங்களை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கூறும்போது அதைச் செவிமடுத்த மாண்புமிகு உச்சநீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளையும் மிகுந்த பொறுமையோடு கேட்டது. அதன்பிறகுதான் நீதிமன்றம் தனது ஒருமனதான தீர்ப்பினை இன்று வழங்கியுள்ளது.
இது ஒன்றும் எளிதான ஒரு விஷயம் அல்ல.

இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாளாகும். நாட்டின் நீதித்துறையின் பொற்காலத்தின் துவக்கம்தான் இது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஒருமனதாக இருந்ததோடு, மிகுந்த துணிவுமிக்கதாகவும் இருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் தனது மன உறுதியை, திண்மையை எடுத்துக் காட்டியது. இதற்கு நமது நீதித்துறைக்கு சிறப்பான பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டிய தேவை எழுகிறது.

நண்பர்களே,

இன்று நவம்பர் 9-ம் நாள்.

இன்றைய தினத்தில்தான் பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது.

இரண்டு வெவ்வேறான எண்ணப் போக்குகள் ஒன்று சேர்ந்து புதியதொரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டன.

நவம்பர் 9 ஆகிய இன்று கர்த்தார்பூர் பாதையும் தொடங்கியுள்ளது. இந்தப் பாதையிலும் கூட இந்தியா-பாகிஸ்தானின் ஒன்றுபட்ட முயற்சிகள் அடங்கியுள்ளன.

நவம்பர் 9-ம் நாளாகிய இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றுபட்டு நின்று, ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என்ற செய்தியை நமக்குத் தருகின்றது. எவர்மீதும் எந்தவிதமான வெறுப்பு உணர்வும் இருக்கலாகாது.

எவரொருவரின் மனதிலும் சிறு துளியளவாவது கசப்புணர்வு இருக்குமேயானால், அத்தகைய உணர்வுக்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும்.
புதிய இந்தியாவில், அச்சத்திற்கோ, கசப்புணர்வுக்கோ, எதிர்மறை உணர்விற்கோ இடமே இல்லை.

நண்பர்களே,

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இருந்தபடி, சட்டத்தின் மூல உணர்வின் அடிப்படையில் மிகவும் கடினமான விஷயங்களையும் கூட தீர்த்து வைக்க முடியும் என்ற செய்தியை இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம், மாண்புமிகு உச்சநீதிமன்றம் நமக்குத் தந்துள்ளது.

இந்த விஷயத்தில் ஓரளவிற்கு தாமதம் இருந்தாலும் கூட, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த தீர்ப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொருவரின் நலனுக்கும் பொருந்தக் கூடியதே ஆகும்.

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான, இந்தியாவின் நீதித்துறையின் மீதான நமது நம்பிக்கைக்கு எந்தவகையிலும் தடுமாற்றம் இருக்கலாகாது. இது மிகவும் முக்கியமானதாகும்.

நண்பர்களே,

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதியதொரு விடியல் தொடங்கியிருப்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

அயோத்தியா பிரச்சனை பல தலைமுறையினரின் மீதும் தாக்கம் ஏற்படுத்தி வந்தது. ஆனால் இன்றைய தீர்ப்புக்குப் பிறகு புதிய இந்தியாவை புதியதொரு உணர்வோடு உருவாக்க வருங்கால தலைமுறையினர் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று நாம் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.

வாருங்கள்! புதியதொரு தொடக்கத்தை உருவாக்குவோம்!

வாருங்கள்! புதியதொரு இந்தியாவை உருவாக்குவோம்!

நாம் வலிமையோடு இருக்க வேண்டும். நமது வளர்ச்சி என்பது யாரையும் ஒதுக்கிய முன்னேற்றமாக இருக்கலாகாது என்ற கருத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொருவரையும் நம்மோடு இணைத்துக் கொண்டு, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு, ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் பெற்று முன்னேறிச் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

ராமர் கோயிலை கட்டுவதற்கான ஒரு முடிவை உச்சநீதிமன்றம் நமக்கு வழங்கியுள்ளது. இந்த முடிவு நமது நாட்டை வளர்த்தெடுப்பதற்கான நமது கடமையை மேலும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை குடிமக்களின் மீது சுமத்தியுள்ளது.

நாட்டின் குடிமக்கள் என்றவகையில் நாட்டின் சட்டத்தையும், அதன் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஒரு சமூகம் என்ற வகையில், ஒவ்வொரு இந்தியனும் நமது வேலைகளை செய்ய வேண்டும்; நமது கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

நம் அனைவரிடையேயும் நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வு, நட்புறவு, ஒற்றுமை, அமைதி ஆகியவை நிலவுவதே நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.

இந்தியர்களாகிய நாம் இணைந்து செயல்பட்டு, கைகோர்த்து முன்னே சென்றால்தான் நமது இலக்குகளையும் நோக்கங்களையும் அடைய முடியும்.

ஜெய் ஹிந்த்! 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Modi blends diplomacy with India’s cultural showcase

Media Coverage

Modi blends diplomacy with India’s cultural showcase
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 23, 2024
November 23, 2024

PM Modi’s Transformative Leadership Shaping India's Rising Global Stature