தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான கூட்டமைப்பு (பி.எம்.என்.சி.ஹெச்) பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து எதிர்வரும் 2018 பங்கேற்போர் அமைப்பின் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் 2018 டிசம்பர் 12, 13 தேதிகளில் நடைபெறுகிறது. பிரதமரைச் சந்தித்த குழுவில் பங்கேற்போர் அமைப்பின் 3 முக்கியத் தலைவர்களான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜே.பி நட்டா, சிலி நாட்டு முன்னாள் அதிபரும் பி.எம்.என்.சி.ஹெச் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளவருமான டாக்டர் மிஷல் பேச்சிலட், பிரபல நடிகரும் யுனிசெப் நல்லெண்ணத் தூதுவருமான திருமதி பிரியங்கா சோப்ரா, பி.எம்.என்.சி.ஹெச் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு ஏ கே சவுபே, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைச் செயலாளர் திருமதி பிரீதி சூடன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தப் பங்கேற்போர் அமைப்பின் கூட்டத்தின் பல வெளிநாடுகளின் தலைவர்கள், சுகாதார அமைச்சர்கள் மற்றும் 1200 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. பி.எம்.என்.சி.ஹெச் என்பது 92 நாடுகள் மற்றும் 1000 – க்கும் மேற்பட்ட அமைப்புகளின் உலகளவிலான கூட்டமைப்பு ஆகும். பி.எம்.என்.சி.ஹெச் – இன் புரவலராக இருப்பதற்குப் பிரதமர் ஒப்புக்கொண்டு இந்த அமைப்பின் சின்னத்தைப் பெற்றுக் கொண்டார்.
தலைவராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் மிஷல் பேச்சிலட் பி.எம்.என்.சி.ஹெச் கூட்டமைப்பின் கடமைகள் குறித்து விளக்கினார். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு அதிகாரமளிப்பதில் உள்ள சவால்களைச் சமாளித்து இந்த அமைப்பை முன்னெடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்துப் பிரதமரிடம் கேட்டறிந்தார். குஜராத்தில் மருத்துவமனைகளில் மகப்பேறு நடைபெறுவதற்குத் தனியார்துறையினருடன் சேர்ந்து மேற்கொண்ட திட்டங்களின் அனுபவங்களைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார். பச்சிளங்குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைச் சந்திப்பதற்காக கிராமங்களில் ஏழைகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சமுதாய உணவளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்த அனுபவத்தையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். திறம்பட்ட தகவல் தொடர்பு அணுகுமுறையின் அவசியத்தை அவர் வெளியேற்றினார். “பங்களிப்பு என்றால் அது கூட்டாண்மைதான்” என்று வலியுறுத்திய பிரதமர் உலகெங்கும் உள்ள மக்கள், குறிப்பாக இளைஞர்களை ஊட்டச்சத்து, திருமணவயது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, ஆகியவற்றில் ஈடுபடுத்தவேண்டியது அவசியம் என்று பிரதமர் ஆலோசனை தெரிவித்தார். பெண்கள், குழுந்தைகள், வளர்இளம் பருவத்தினர் ஆகியோருக்கான திட்டங்களை அமல்படுத்தவும் அது குறித்த தகவல் தொடர்புக்கும் சிறந்த ஆலோசனையைப் பிரதமர் வரவேற்றார். இந்தக் கருத்துக்கள் தொடர்பாக இணையம் மூலம் வினாடிவினாப் போட்டி நடத்தி அதில் வென்றவர்களுக்குப் பரிசுகளை 2018 டிசம்பர் பங்கேற்போர் அமைப்புக் கூட்டத்தில் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார்.