மகாராஷ்டிராவில் மும்பை, அவுரங்கபாத், நாக்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 07, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.
மும்பை
மும்பையில், நகரின் மெட்ரோ திட்டத்தில் 42 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை ஒருங்கிணைக்கும் மூன்று மெட்ரோ தடங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, கைமுக்கிலிருந்து சிவாஜி சதுக்கம் (மீரா சாலை) வரை மெட்ரோ -10 பாதை, 12.7 கிலோமீட்டர் தூரத்திற்கு, வடாலாவிலிருந்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் வரை மெட்ரோ-11 பாதை, 20.7 கிலோமீட்டர் தூரத்திற்கு, கல்யாணிலிருந்து தலோஜா வரை மெட்ரோ-12 பாதை ஆகியவை இந்த மூன்று தடங்களாகும்.
நவீன மெட்ரோ பவனுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்; 32 அடுக்குகளைக் கொண்ட இந்த மையம் 340 கிலோமீட்டர் தூரமுள்ள 14 மெட்ரோ பாதைகளை செயல்படுத்தவும், கண்காணிக்கவுமானது.
கண்டிவாலி கிழக்குப் பகுதியில் உள்ள பண்டோங்ரி மெட்ரோ ரயில் நிலையத்தைப் பிரதமர் திறந்து வைப்பார்.
இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது அதிநவீன மெட்ரோ ரயில்பெட்டியையும் அவர் தொடங்கி வைப்பார்.
மகா மும்பை மெட்ரோவுக்கான அடையாள ஆவணத்தையும் பிரதமர் வெளியிடுவார்.
அவுரங்காபாத்
அவுரங்காபாதில் மாநில அளவில் சுயஉதவி குழுக்கள் மூலம் அதிகாரம்பெற்ற மகளிர் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். மகாராஷ்டிரா மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாக்பூர்
நாக்பூரில் உள்ள சுபாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 11 கிலோமீட்டர் தூரத்திற்கான நாக்பூர் மெட்ரோ அக்வா லைனை பிரதமர் தொடங்கி வைப்பார். லோக்மானிய நகர் மெட்ரோ நிலையத்திலிருந்து சீதாபுல்டி வரையிலான பிரிவின் இருபுறங்களிலும் நிறைய நீர்நிலைகள் இருப்பதால் இதற்கு அக்வா லைன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பயணிகள் சேவை லோக்மானிய நகர் மெட்ரோ நிலையத்திலிருந்து சீதாபுல்டி சந்திப்பு வரை இருக்கும். இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் ஹிங்னாவில் உள்ள மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்குப் புதிய ரயில்பாதை வசதியாக இருக்கும்.
இதைத் தொடர்ந்து மங்காப்பூர் விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.
நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கல்விக் கழகம் – எய்ம்ஸ்-ல் புறநோயாளிப் பிரிவை அவர் தொடங்கி வைப்பார்.
வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
என்.ஹெச்.-353 டி-யின் நாக்பூர்-உம்ரீத் பிரிவு, என்.ஹெச்-547 ஈ-யின் சாவோநெர்-தாபேவாடா-கல்மேஸ்வர்-கோண்ட்கய்ரி பிரிவு ஆகியவற்றின் நான்குவழிப் பாதைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
நாக்பூரில் ஐ சி எம் ஆர் – என்ஐவி சுகாதார மையத்தின் துணை மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மனித ஆரோக்கியம், விலங்குகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்து சாதிப்பதற்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் தற்போதுள்ள நோய்களைக் கட்டுப்படுத்துவது, புதிதாக உருவாகும் கிருமிகளை அடையாளம் காண்பது, திறன் மேம்பாடு, மனிதவள மேம்பாடு ஆகியவற்றுக்காக ஐசிஎம்ஆர் மையம் செயல்படுகிறது.