பிரதமர் திரு. நரேந்திர மோடி, மிசோராம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.
“மனங்கவரும் மற்றும் அற்புதமான வடகிழக்குப் பகுதி அழைக்கிறது! மிசோராம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு நாளை செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள், வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிப் பயணத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
ஐஸ்வால் பகுதியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், துய்ரியால் நீர்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க உள்ளதை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்ததன் மூலம், மிசோராம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.
நமது இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 கோடியில் வடகிழக்கு மூலதன நிதியை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த நிதியத்திலிருந்து தொழில்முனைவோருக்கு காசோலைகளை நான் நாளை வழங்க உள்ளேன். வடகிழக்குப் பகுதியின் மேம்பாட்டுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மத்தியில் தொழில் செய்வதற்கான ஆர்வம் இருப்பது சிறப்பானது.
ஷில்லாங்கில், ஷில்லாங்-நாங்ஸ்டோயின்-ரோங்ஜெங்-துரா சாலையை தொடங்கிவைக்க உள்ளேன். இந்தத் திட்டம், இணைப்பு வசதியை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். பொதுக் கூட்டத்திலும் கூட நான் உரையாற்ற உள்ளேன்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அதிக அளவிலான வாய்ப்புகளை நாம் பார்க்கிறோம். மேலும், வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அனைத்தையும் செய்ய உறுதிபூண்டுள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.