பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜனவரி 27, 2019) மதுரை வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதோடு, அதே நாளில் மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு மருத்துவப் பிரிவையும், தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதால், மதுரையிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் சுகாதார வசதிகள் அதிகரிக்கும் என்பதால், இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எய்ம்ஸ், மதுரை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதன் குறியீடாக கல்வெட்டு ஒன்றைப் பிரதமர் திறந்து வைப்பார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 17.12.2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2015-16 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் ரூ.1264 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, புதிய எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவை முழுவதும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் 45 மாதங்களில் அதாவது 2022 செப்டம்பர் வாக்கில் நிறைவடையும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளைக் கொண்டதாக இருக்கும். அவசரகால மற்றும் விபத்துப் பிரிவில் 30 படுக்கைகளும், ஐசியு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 75 படுக்கைகளும், பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 215 படுக்கைகளும், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பிரிவுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 285 படுக்கைகளும், ஆயுஷ் மற்றும் தனியார் வார்டுகளுக்கு 30 படுக்கைகளும் இடம்பெறும். மேலும், நிர்வாகப் பிரிவு, திறந்தவெளி அரங்கம், இரவு தங்கும் இடம், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகளும் இதில் இருக்கும்.
முதுநிலை பட்டப்படிப்பு, உயர்கல்வி, ஆராய்ச்சி போன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதாகவும் மதுரை எய்ம்ஸ் அமைக்கப்படுகிறது. இதில், 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 பி.எஸ்.சி (செவிலியர்) படிப்புக்கான இடங்களும் இருக்கும். புதிய எய்ம்ஸ் அமைக்கப்படுவதன் மூலம் இந்த மண்டலத்தில் சுகாதார வசதிகளிலும், சுகாதார கல்வி மற்றும் பயிற்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். மேலும், இந்த மண்டலத்தில் சுகாதாரம் சார்ந்து பணிபுரிவோர் பற்றாக்குறையும் தீர்ந்து விடும். புதிய எய்ம்ஸ் உருவாக்கப்படுவது இங்குள்ள மக்களுக்கு உயர் சிகிச்சை மருத்துவ வசதி கிடைப்பதற்காக மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களையும் மற்ற சுகாதார ஊழியர்களையும் உருவாக்கவும் பயன்படும். இதனால்,தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் உருவாக்கப்படவுள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ நிறுவனங்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுத் திட்டங்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவு, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு கல்வெட்டுக்களைப் பிரதமர் திறந்து வைப்பார்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூ.150 கோடி என மூன்று மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான செலவு ரூ.450 கோடியாகும். ஒவ்வொரு கல்லூரியின் செலவிலும் மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடியாகவும், மாநில அரசின் பங்கு ரூ.25 கோடியாகவும் இருக்கும்.
மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் (50 ஐசியூ படுக்கைகள் உட்பட) 320 படுக்கைகள் இடம்பெறும். இங்கு நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், தோற்ற சீரமைப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, சிறுநீர்ப் பாதை சிகிச்சை, நுண் ரத்த ஊட்டம், இரைப்பை சார்ந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையியல் ஆகிய ஏழு துறைகள் இடம்பெற்றிருக்கும்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் மேம்பாட்டுத் திட்டத்தில் (90 ஐசியூ படுக்கைகள் உட்பட) 290 படுக்கைகளுடன் உயர் சிகிச்சைப் பிரிவு இடம்பெறும். இங்கு இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீர்ப் பாதை சிகிச்சை, சிறுநீரகவியல், தோற்ற சீரமைப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, இரைப்பை சார்ந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையியல், ரத்த நாள அறுவை சிகிச்சை ஆகிய பத்து துறைகள் இடம்பெற்றிருக்கும். ஐந்து அறுவை சிகிச்சை அரங்குகளும் இருக்கும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் மேம்பாட்டுத் திட்டத்தில் (50 ஐசியூ படுக்கைகள் உட்பட) 330 படுக்கை வசதிகளுடன் உயர் சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டுள்ளது. இதில் இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீர்ப் பாதை சிகிச்சை, சிறுநீரகவியல், தோற்ற சீரமைப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, இரைப்பை சார்ந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையியல் ஆகிய எட்டு துறைகள் இடம்பெற்றிருக்கும். ஏழு அறுவை சிகிச்சை அரங்குகளும் இருக்கும்.
நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதும், 73 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதும் பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் பகுதியாக உள்ளது. ஏற்கனவே, ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதும், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படுவதும், சுகாதாரமான இந்தியாவை நோக்கி என்ற அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகும். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இவை மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.