பிப்ரவரி 12, 2019 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குருஷேத்ராவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நடைபெற உள்ள தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார். ஹரியானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.
தூய்மை சக்தி 2019
தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று 2019 ஆம் ஆண்டுக்கான தூய்மை சக்தி விருதுகளை வழங்க உள்ளார். குருஷேத்ராவில் தூய்மையான, அழகான கழிவறை குறித்து வைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட பின், பொதுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார்.
தூய்மை சக்தி 2019 என்பது நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துத் தலைவிகளும், பஞ்சாயத்துத் தலைவர்களும் பங்கேற்கும் தேசிய நிகழ்வாகும். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் காந்தி நகரில், 2017 ஆம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தூய்மை சக்தியின் முதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உத்தரப்பிரதேசம் லக்னோவில் தூய்மை சக்தியின் 2-வது நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இந்நிகழ்ச்சியின் 3-வது தொகுப்பு குருஷேத்ராவில் நடைபெற உள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள்
ஜாஜர் பட்சாவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
ஜாஜரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுக்கான தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) அமைக்கப்பட்டுள்ளது. 700 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, மயக்க மருந்து, வலி நிவாரண மையம், அணு சக்தி மருத்துவ வசதிகளுடன் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் கவனிப்பாளர்களுக்கு தங்கும் அறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் புற்றுநோய் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் என்சிஐ தலைமை நிறுவனமாக செயல்படும். நாட்டில் உள்ள பிற புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மண்டல புற்றுநோய் மையங்களுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படும். இந்தியாவின் உயர்தர புற்றுநோய் நிறுவனமான என்சிஐ மூலக்கூறு உயிரியல், மரபியல், புரதச்சத்து தொடர்பான ஆய்வு, புற்றுநோய் தொற்று அறிவியல், கதிர்வீச்சு உயிரியல் மற்றும் புற்றுநோய் தொடர்பான தடுப்பூசி ஆகியவற்றின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளைக் கண்டறியும் பொறுப்பு இந்நிறுவனத்திற்கு உள்ளது.
பரிதாபாத்தில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கம்
வடஇந்தியாவின் முதல் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக இது அமையும். 510 படுக்கை வசதிகளும் பிற நவீன வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ.சி., காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், முக்கியமாக உழைக்கும் வர்க்கத்தினருக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் சமூக பாதுகாப்பை அளிக்கிறது.
பஞ்ச்குலாவில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்
பஞ்ச்குலாவில் உள்ள ஸ்ரீ மாதா மான்சா தேவி ஆலய வளாகத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. ஆயுர்வேத சிகிச்சை, கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசிய நிறுவனமாக இது அமையும். இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின் ஹரியானா மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களுக்கு இது பெரும் பயன் அளிக்கும்.
குருஷேத்ராவில் ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும்
ஹரியானா மற்றும் உலகளவில் இந்திய மருத்துவ முறை தொடர்பான முதல் பல்கலைக்கழகமாக ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பானிபட் போர்களுக்கான அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்
பானிபட் போர்களின் பல்வேறு நாயகர்களை கவரவிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமையும். தேசிய வளர்ச்சிக்காக பெருமளவில் பங்காற்றிய அறியப்படாத நாயகர்களை கவுரவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளில் இந்த அருங்காட்சியகம் ஒன்றாகும்.
கர்னலில் சுகாதார அறிவியலுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்
கர்னலில் சுகாதார அறிவியலுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
இந்த நடவடிக்கைகள் ஹரியானாவின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார வசதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.