பிரதமர் திரு. நரேந்திர மோடி, கர்நாடக மாநிலத்துக்கு நாளை (29-10-17) பயணம் மேற்கொள்கிறார். அங்கு மூன்று பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்ற உள்ளார்.
தர்மஸ்தலத்தில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தி, தனது பயணத்தை பிரதமர் தொடங்குகிறார். உஜிரே பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும், ஸ்ரீ ஷேத்திர தர்மஸ்தல ஊரக மேம்பாட்டுத் திட்டம் என்ற அறக்கட்டளையில் உள்ள பயனாளிகளுக்கு ரூபே அட்டைகளை வழங்குகிறார். இது ரொக்கமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுயஉதவிக் குழுக்கள் தொடங்குவதற்கு வழிவகை செய்யும்.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், தஷம சவுந்தர்ய லகரி பாராயணோட்சவ மகாசர்மபனே-வில் கூடும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
சவுந்தர்ய லகரி என்பது ஆதி சங்கராச்சார்யார் தொகுத்த ஸ்லோகங்களின் ஒரு பகுதி ஆகும். இந்த ஸ்லோகங்களை பொதுமக்கள் ஒன்றாக பாடுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலையில், பிதார் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர், பிதார்-கலபுரகி இடையேயான புதிய ரயில் பாதையைத் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.