சர்வதேச மகளிர் தினமான நாளை (8.3.2018) பிரதமர் திரு நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு-வுக்கு பயணமாகிறார். பெண் குழந்தையை பாதுகாத்து கல்வி அளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் தீவிர கவனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நாடெங்கிலுமாக பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் திட்டத்தை தற்போதுள்ள 161 மாவட்டங்களிலிருந்து 640 மாவட்டங்களாக விரிவாக்குவதை பிரதமர் அறிவிக்கிறார்.
இந்தத் திட்டத்தினால் பயனடைந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார். இந்தத் திட்டத்தின்கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கு சான்றிதழ்களை பிரதமர் வழங்குகிறார்.
மற்றொரு முக்கிய திட்டமான தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை நாடு முழுமைக்குமாக பிரதமர் ஜுன்ஜுனு-வில் தொடக்கி வைக்கிறார். அதற்கான நிகழ்ச்சியில் அவர் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் – ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை ஆகியவற்றுக்கான பொது மென்பொருள் செயலியையும் தொடக்கி வைக்கிறார். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டச்சத்து குறைவு, குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது, இளம் குழந்தைகள், மகளிர், விடலைப்பருவ பெண்கள் ஆகியோரிடையே ரத்த சோகை, குழந்தைகளிடையே வளர்ச்சிக்குறைவு ஆகியவற்றை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.