பிரதமர் திரு. நரேந்திர மோடி, 15 பிப்ரவரி 2019 அன்று ஜான்சி செல்கிறார். ஜான்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் பாதுகாப்பு தொழில் வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் வகையில், நாட்டின் 2 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒன்று தமிழ்நாட்டிலும், மற்றொன்று உத்தரப்பிரதேசத்திலும் அமைய உள்ளன. உத்தரப்பிரதேசத்தில், பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைய உள்ள 6 மையங்களில் ஜான்சியும் ஒன்று. 2018 பிப்ரவரியில் நடைபெற்ற உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் இது போன்ற ஒரு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.
ஜான்சி-கைரார் இடையிலான 297 கிலோ மீட்டர் தூர மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம், ரயில்கள் வேகமாக செல்வதற்கும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும், நீடித்த சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் அமையும்.
அத்துடன் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான மேற்கு-வடக்குப் பகுதிகளுக்கு இடையிலான மின்சார பகிர்மானத்தை வலுப்படுத்தும் திட்டத்தையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பஹாரி அணை நவீனப்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். பஹாரி அணை, ஜான்சி மாவட்டத்தில் தாசன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும்.
அனைவருக்கும் குடிநீர் வழங்குவது என்ற மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், பண்டல்கண்ட் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். வறட்சிக்கு இலக்காகும் பண்டல்கண்ட் பகுதியில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் அவசியமானதாகும். அம்ருத் திட்டத்தின் கீழ் ஜான்சி நகர குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜான்சியில் ரயில் பெட்டி புதுப்பிக்கும் பணிமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். பண்டல்கண்ட் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த பணிமனை உதவிகரமாக இருக்கும்.
ஜான்சி – மாணிக்பூர் மற்றும் பீம்சென் – கைரார் இடையிலான 425 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டம் ரயில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு மட்டுமின்றி, பண்டல்கண்ட் பகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும்.
இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் மற்றும் வாரணாசிக்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, முறையே, பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கான 300 கோடியாவது மதிய உணவை வழங்கியதுடன், வெளிநாடுவாழ் இந்தியர் மாநாட்டிலும் பங்கேற்றார்.