குவஹாத்தி, இட்டாநகர் மற்றும் அகர்தாலாவுக்கு பிரதமர் நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இட்டாநகரில் உள்ள புதிய பசுமை வழி விமான நிலையம், செலா சுரங்கப்பாதை மற்றும் எரிவாயு கட்டமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தூர்தர்ஷன் அருண் பிரபா தொலைக்காட்சியையும், கார்ஜி-பெலோனியா ரயில் தடத்தையும் பிரதமர் துவக்கிவைப்பார். 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் துவக்கிவைப்பார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பிரதமர்
நாளை காலை குவஹாத்தியிலிருந்து இட்டாநகருக்கு பயணம் மேற்கொள்வார். இட்டா நகரில் உள்ள ஐ.ஜி பூங்காவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கிவைப்பார்.
ஹொலாங்கியில் பசுமை வழி விமான நிலைய கட்டுமானப் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தற்போது இட்டா நகருக்கு அருகே உள்ள விமான நிலையம் அஸ்ஸாமின் லீலாபாரியில் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹொலாங்கியில் கட்டப்பட உள்ள விமான நிலையம் இந்த தூரத்தை நான்கு மடங்கு குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதுடன், இந்த விமான நிலையம் மாநிலத்தின் சுற்றுலாத் திறனையும் அதிகரிக்கும். இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, நாட்டிற்கு உத்திசார் முக்கியத்துவத்தை அளிக்கும். விமான நிலையத்தில் சத்தத்தை குறைக்கும் வகையில் பசுமைப் பாதை, மழைநீர் சேகரிப்பு, எரிசக்தியை சேமிக்கும் கருவிகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அம்சங்கள் அமைக்கப்படும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் செலா சுரங்கப்பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஆண்டு முழுவதும், பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் தவாங் பள்ளத்தாக்கிற்கு சென்று வர, இந்த சுரங்கப்பாதை உதவியாக இருக்கும். இதன் மூலம் தவாங் செல்லும் பயண நேரத்தில் ஒருமணிநேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இட்டாநகர் ஐ.ஜி பூங்காவில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான டி.டி.அருண் பிரபா என்ற பிரத்யேக தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரதமர் துவக்கிவைப்பார். இது தூர்தர்ஷனால் இயக்கப்படும் 24-வது தொலைக்காட்சியாகும். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 110 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின்நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பிரம்மப்புத்திராவின் இணைப்பு நதியான திக்ராங் நதியிலிருந்து மின்சாரம் எடுக்கும் இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணியை நீப்கோ அமைப்பு மேற்கொள்ளும். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு மலிவான விலையில் நீர்வழி மின்சாரம் கிடைத்து, அந்த மண்டலத்தின் மின்சார இருப்பை அதிகரிக்கும்.
அருணாச்சலப் பிரதேசத்தின் ஜோட்டேயில் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டுவார். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள திரைப்பட மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நவீனமயமாக்கப்பட்ட தெஜூ விமான நிலையத்தை பிரதமர் துவக்கிவைப்பார். உதான் திட்டத்தின்கீழ், இந்த விமான நிலையம் மறுசீரமைக்கப்பட்டு, அதன் வர்த்தக போக்குவரத்திற்கான புதிய முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் 50 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை பிரதமர் துவக்கிவைக்க உள்ளார். அனைவருக்கும் சுகாதார வசதியை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நிலையம் விளங்குகிறது. சவுபாக்கியா திட்டத்தின்கீழ், 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசத்தை பிரதமர் அறிவிக்கவுள்ளார்.
அஸ்ஸாமில் பிரதமர்
இட்டா நகரிலிருந்து குவஹாத்தி திரும்பும் பிரதமர், வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுவார். இந்தத் திட்டத்தின் மூலம் இயற்கை எரிவாயு இருப்பு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்து, தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும். ஒட்டுமொத்த வடகிழக்கு மண்டலத்திற்கும், மலிவான மற்றும் தரமான எரிவாயு வழங்கும் அரசு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கட்டமைப்புத் திட்டம் விளங்கும். கம்ரப், காச்சர், ஹைலாகண்டி மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களின் நகர எரிவாயு விநியோக அமைப்புகளுக்கான அடிக்கல்லை நாட்டுவார். வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கு தூய்மையான எரிவாயு கிடைக்கச் செய்வதை இந்த அமைப்புகள் உறுதி செய்யும்.
அஸ்ஸாமின் தின்சுக்கியாவில் ஹாலாங் மாடுலர் எரிவாயு பதப்படும் ஆலையை பிரதமர் துவக்கிவைப்பார். அஸ்ஸாமின் ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தியில் 15 சதவீதம் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும். வட குவஹாத்தியில் பெருமளவில் எல்பிஜியை சேகரிக்கக் கூடிய மிகப்பெரிய கொள்கலனையும் பிரதமர் திறந்துவைப்பார். மேலும் நுமாலிகரில் உள்ள என்.ஆர்.எல். சுற்றுச்சூழலுக்கேற்ற சுத்திகரிப்பு மையத்திற்கும், பீகார், மேற்குவங்காளம், சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் வழியே பரோனி முதல் குவஹாத்தி வரை செல்லும் 729 கிலோமீட்டர் நீளம் கொண்ட எரிவாயு குழாய் வசதிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
திரிபுராவில் பிரதமர்
தனது பயணத்தின் இறுதியில் அகர்தலாவுக்கு செல்லும் பிரதமர், சுவாமி விவேகானந்தா அரங்கத்திலிருந்து கார்ஜி – பெலோனியா ரயில் தடத்திற்கான கல்வெட்டை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்தத் திட்டம், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக திரிபுராவை மாற்றியமைக்கும். நரசிங்கரில் உள்ள திரிபுரா தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் துவக்கிவைக்கவுள்ளார்.
அகர்தலாவில் உள்ள மகாராஜா வீர் விக்ரம் விமான நிலையத்தில் மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் சிலையை பிரதமர் திறந்துவைப்பார். நவீன திரிபுராவை உருவாக்கிய பெருமைக்குரியவர் மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர். அகர்தலா நகரத்தை வடிவமைத்த பெருமையும் அவரைச் சேரும். நாட்டின் வளர்ச்சிக்காக பெருமளவு பங்களித்த அறியபடாத கதாநாயகர்களை கௌரவிக்கும் மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில் இவரது சிலை திறக்கப்படுகிறது.