நாளை (30.09.18) குஜராத் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குஜராத்தில் ஆனந்தில் அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் ஆலையையும், நவீன உணவுப் பதப்படுத்தும் வசதிகளையும், திரு. மோடி திறந்து வைக்கிறார். மேலும், முஜ்குவா கிராமத்தில் ஆனந்த் வேளாண் பல்கலைக் கழகத்தில் பராமரிப்பு மையம், அதனுடன் இணைந்த உணவுப் பதப்படுத்தும் மையம் மற்றும் சூரிய ஒளி கூட்டுறவு சங்கத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். ஆனந்த் மற்றும் கட்ராஜ் ஆகிய இடங்களில் அமுல் உற்பத்தி வசதிகளுக்கான விரிவாக்கத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
பின்னர், அஞ்சாருக்கு செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, முந்த்ராவில் இயற்கை எரிவாயு முனையத்தை தொடங்கி வைக்கிறார். அஞ்சார் – முந்த்ரா எண்ணெய்க் குழாய் மற்றும் பலன்பூர் – பாலி – பார்மர் குழாய் பதிக்கும் திட்டங்களை அவர் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
இதையடுத்து, ராஜ்கோட்டுக்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார். காந்தியடிகள் வாழ்ந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகளை சித்தரிக்கும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. காந்திய கலாசாரம், பண்புகள் மற்றும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் உதவும். மேலும், பொதுமக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின்கீழ், 624 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதன் திறப்புவிழாவை குறிக்கும் வகையில், கல்வெட்டு ஒன்றையும் பிரதமர் திறந்து வைக்கிறார். அங்கு புதுமனை புகும் பயனாளிகளான 240 குடும்பத்தினரையும் அவர் நேரில் சந்திக்கிறார்.
புதுதில்லி திரும்புவதற்கு முன்னர், பிரதமர் திரு. நரேந்திர மோடி, மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்கும் செல்கிறார்.