பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்திற்கு 2017, அக்டோபர் 7, 8 ஆம் தேதிகளில் பயணம் செய்கிறார். 2017.
அக்டோபர் 7ஆம் தேதி காலையில் பிரதமர் துவாரகாதீசர் ஆலயத்துக்குச் செல்வார். துவாராகிவில், அவர் ஓகாவுக்கும் பேயத் துவாரகாவுக்கும் இடையில் அமைக்கப்பட இருக்கும் பாலத்திற்கும் இதர சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல்லை நாட்டுகிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
துவாரகாவிலிருந்து பாரதப் பிரதமர் சுரேந்தர்நகர் மாவட்டத்தில் உள்ள சோடிலா நகருக்கு வருகிறார். ராஜ்கோட்டில் க்ரீன்ஃபீல்டு விமான நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அத்துடன் அகமதாபாத் – ராஜ்கோட் இடையில் ஆறு பாதைகள் கொண்ட மாநில நெடுஞ்சாலை, ராஜ்கோட் – மோர்பி இடையில் நான்கு பாதைகள் கொண்ட மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பால் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைக்கும் முழுமையான தானியங்கி பால் பண்ணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், சுரேந்திர நகர் பகுதியில் ஜோரவார்நகருக்கும் ரத்னபூருக்கும் இடையில் குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதையடுத்து, பொதுக் கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் பிரதம மந்திரி காந்தி நகருக்குப் பயணமாகிறார். காந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஐஐடி கல்வி நிறுவனத்தின் கட்டடத்ததையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன் பிரதம மந்திரி டிஜிட்டல் வழி கிராமிய எழுத்தறிவு பிரசார இயக்கத்தை (PMGDISHA) தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் வழியாக எழுத்தறிவு புகட்டும் திட்டமாகும். இது தகவல், அறிவு, கல்வி, உடல்நலம் பேணல் ஆகியவற்றுக்கு உதவும். மேலும், உணவு, உடை ஆகிய அடிப்படைத் தேவைகளை உருவாக்கிக் கொள்ளவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான நிதியைக் கையாள்வதற்கும் உதவும். இத்திட்டங்களை அடுத்து, பிரதமர் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
பிரதம மந்திரி அக்டோபர் 8ஆம் தேதி வாத்நகருக்கு வருகை தருகிறார். இது இந்நகருக்கு திரு. நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றதற்குப் பின் மேற்கொள்ளும் முதல் வருகை ஆகும். அவர் ஹத்கேஷ்வர் ஆலயத்திற்கு அவர் வருகை புரிகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, முழுமையான நோய்த்தடுப்பு இலக்கை அடையும் வகையில் இந்திர தனுஷ் திட்டத்தின் தீவிர இயக்கத்தையும் தொடங்கி வைக்கிறார். (இந்திரதனுஷ் இயக்கம் நாடு முழுவதும் குழந்தைகள், கருவுற்றோர் ஆகியோருக்கு நோய்த் தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டத்தின் இயக்கமாகும்.) இதன் மூலம் இந்த இயக்கத்தைச் செயல்படுத்த, நகர்ப்புறங்களிலும் குறைந்த அளவு நோய்த்தடுப்பு இயக்கம் குறைவாகச் செயல்பட்ட பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.
அதையடுத்து, பாரதப் பிரதமர் சமுதாய மக்கள் நலச் செயல்பாடுகளுக்கான புதிய கைபேசித் தொழில்நுட்பத்தை (ImTeCHO) தொடங்கி வைக்கும் விதத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஈ-மாத்திரைகளை வழங்குகிறார். ImTeCHO என்பது ஆஷா திட்டப் பணியாளர்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கைபேசி செயலி ஆகும். இதன் மூலம் ஆஷா பணியாளர்கள் மேற்பார்வையிடல், பணியில் ஆதரவளித்தல், ஊக்கமளித்தல் ஆகிய பணிகளில் சிறப்பாக செயல்பட உதவும். இதனால், இந்தியாவில் போதிய மருத்துவ வசதியற்ற நிலையில் உள்ள தாய்மை அடைந்தோர், பிறந்த சிசு, குழந்தைகளின் சுகாதார நலனுக்குச் சேவை புரிய இயலும். ImTeCHO என்பது “சமுதாய மக்கள் நலப்பணிகளுக்கான புதிய கைபேசி தொழில்நுட்பம்“ ஆகும். குஜராத் மொழியில் TeCHO என்றால் ஆதரவு என்று பொருள். எனவே, ImTeCHO என்றால் “நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்” என்று ஆகும். இந்நிகழ்ச்சிகளை அடுத்து, பிரதம மந்திரி அதையடுத்து பொதுமக்களிடையே சொற்பொழிவு ஆற்றுவார்.
அதே தினம் பிற்பகலில், பிரதம மந்திரி பரூச் நகருக்கு வருகிறார். அங்கு, நர்மதை நதியின் குறுக்கே பத்புத் தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், குஜராத் மாநிலத்தின் உத்னா (சூரத்) நகருக்கும் பிகார் மாநிலத்தின் ஜெய் நகருக்கும் இடையிலான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதற்கான கல்வெட்டையும் அவர் திறந்து வைக்கிறார். அதையடுத்து, குஜராத் நர்மதா உரக் கழகத்தின் (Gujarat Narmada Fertilizer Corporation) பல்வேறு ஆலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். நிறைவாக, பொதுமக்களிடையில் அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அக்டோபர் 8ஆம் தேதி மாலையில் தில்லிக்குத் திரும்புகிறார்.