பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 22, 2017) குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு கோகாவில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமர் கோகா மற்றும் தஹேஜ் இடையேயான ரோரோ பயணிகள் படகு வசதி திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சவுராஷ்டிராவின் கோகா மற்றும் தெற்கு குஜாராத்த்தில் உள்ள தஹேஜ் இடையே தற்போது உள்ள ஏழு அல்லது எட்டு மணி நேரம் பிடிக்கும் பயண நேரம் இந்த படகு வசதி மூலம் ஒரு மணி நேரமாக குறையும். இந்த படகு சேவை முழுமையாக செயல்பட துவங்கும்போது, வாகனங்களின் இடமாற்றத்திற்கும் இந்த வசதி துணை புரியும். ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் இந்த சேவையின் முதல் கட்டத்தை துவக்கிவைப்பர். இது பயணிகளுக்கான சேவை. இதன் முதல் பிரயாணத்தில் பிரதமர் கோகா முதல் தஹேஜ் வரை பயணம் செய்வார். இந்த படகு சேவை மூலம் தஹேஜ் செல்லும் பிரதமர் அங்கு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.
அதேபோல், கோகா பொது கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ஸ்ரீ பாவ்நகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சரவோத்தம் கால்நடை தீவன தயாரிப்பு ஆலையை தொடங்கி வைப்பார்.
தஹேஜ்ஜில் இருந்து பிரதமர் வதோத்ராவிற்கு பயணம் மேற்கொள்வார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் வதோத்ரா நகர கட்டுப்பாட்டு மையம், வகோடியா மண்டல நீர் விநியோக திட்டம், வதோத்ராவில் பரோடோ வங்கிக்கான புதிய தலைமை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு சாவியை பிரதமர் வழங்குவார். ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், மண்டல நீர் விநியோக திட்டங்கள், வீட்டுத் திட்டங்கள், மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். முந்த்ரா-தில்லி பெட்ரோலியப் பொருட்கள் செல்லும் குழாயின் கொள்திறன் விரிவாக்கம் மற்றும் வதோத்ராவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பசுமை சந்தை முனையத் திட்டம் ஆகியவற்றிற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.