பிரதமர் திரு நரேந்திர மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஜனவரி 23-ம் தேதி நடைபெறவுள்ள பராக்கிரம தின கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்காக கொல்கத்தா செல்கிறார். அசாம், சிவசாகரில் 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை வழங்குவதற்காக ஜெரங்காபதர் நகருக்கும் பிரதமர் செல்கிறார்.
மேற்கு வங்கத்தில் பிரதமர் கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் ‘பராக்கிரம தின’ தொடக்க விழாவுக்கு பிரதமர் தலைமை வகிப்பார். நேதாஜியின் இணையற்ற வீரம், தன்னலமற்ற தேசத் தொண்டு ஆகியவற்றைப் போற்றிப் பாராட்டும் வகையில், மத்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு நேதாஜி செய்தது போல, நாட்டுப்பற்றை ஊட்டவும், எத்தகைய துன்பத்தையும் துணிச்சலுடன் எதிர்நோக்கும் ஊக்கத்தை விதைக்கும் வகையில் இது கொண்டாடப்படவுள்ளது.
நேதாஜி குறித்து நிரந்தர கண்காட்சி மற்றும் படக் காட்சி இந்த விழாவையொட்டி தொடங்கி வைக்கப்படும். நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுவார். ‘ அம்ர நூதன் ஜௌபோநேரி தூத்’ என்னும் நேதாஜி பற்றிய கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கொல்கத்தா தேசிய நூலகத்துக்கு பிரதமர் சென்று பார்வையிடுவார். ‘’ 21-ம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷின் மரபை ஆய்வு செய்தல்’’ என்னும் சர்வதேச மாநாட்டுக்கும், கலைஞர்கள் முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பவர்கள் மற்றும் கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.
அசாமில் பிரதமர்
இதற்கு முன்பாக, அசாம் செல்லும் பிரதமர் சிவசாகரில் 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை/ ஒதுக்கீட்டுச் சான்றுகளை வழங்குவார். மாநிலத்தின் மண்ணின் மக்களுக்கு நில உரிமைகளைப் பாதுகாக்கும் அவசர அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அசாம் மாநில அரசு, விரிவான புதிய நிலக் கொள்கையை வகுத்துள்ளது. உள்ளூர் மக்களின் நில உரிமைகள் இதன் மூலம் பாதுகாக்கப்படும். உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டும் விதத்தில், நிலப் பட்டாக்கள்/ஒதுக்கீட்டு சான்றிதழ்களை வழங்க உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2016-ல் அசாமில் 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்தன. தற்போதைய அரசு 2016 மே மாதம் முதல் 2.28 லட்சம் குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள்/ஒதுக்கீட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளது. இந்த நடைமுறையில் அடுத்த கட்டமாக ஜனவரி 23-ம் தேதி விழா நடைபெறுகிறது.