பிரதமர் திரு. நரேந்திர மோடி 09.01.2019 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவர் கங்காஜல் திட்டத்தையும், மற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். ஆக்ரா பொலிவுறு நகரத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் எஸ்.என். மருத்துவக் கல்லூரியின் தர மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.
கங்காஜல் திட்டம் ரூ.2880 கோடி செலவு பிடிக்கும். இது ஆக்ராவுக்கு சிறந்த, அதிக உத்தரவாதமான குடிநீர் விநியோகத்தை அளிப்பதாகும். இதன் மூலம் நகரில் குடியிருப்போரும், சுற்றுலாப் பயணிகளும் பயனடைவார்கள்.
ஆக்ராவில் உள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரியின் தர மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு ரூ.200 கோடி ஆகும். இந்த மகளிருக்கான மருத்துவமனையில் மகப்பேறுக்காக 100 படுக்கை வசதிகள் செய்யப்படும். சமூகத்தில் நலிந்தப் பிரிவினருக்கு உடல் ஆரோக்கியமும், பேறுகால கவனிப்பும் கிடைக்க இது உதவும். ஆக்ரா பொலிவுறு நகரத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ரூ.285 கோடி செலவில் உருவாக்கப்படும். இது ஆக்ராவை நவீன உலகத்தரம் வாய்ந்த பொலிவுறு நகரமாக மேம்படுத்த உதவும். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதற்கு ஏதுவானதாக உருவாகும்.
ஆக்ராவில் உள்ள கோத்திமீனா பஜார் அருகே பொதுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றினார்.
இந்நகருக்கு 2-வது முறையாக பிரதமர் பயணம் செய்கிறார். ஏற்கனவே 20.11.2016 அன்று அவரது பயணத்தின் போது பிரதமரின் (ஊரக) வீட்டுவசதித் திட்டத்தை திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 9.2 லட்சம் உட்பட இது வரை 65 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.