பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவுக்கு நாளை 09.03.2019, பயணம் மேற்கொள்கிறார். இங்குள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் கல்விக்கழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் கல்விக்கழகம் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டை அவர் திறந்து வைப்பார். இந்த வளாகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உருவச்சிலையை அவர் திறந்து வைப்பார்.
மெட்ரோ திட்டத்தில் நொய்டா சிட்டி செண்ட்ர் – நொய்டா மின்னணு நகர் பிரிவைப் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்தப் பிரிவு நொய்டாவில் வாழ்வோருக்கு வசதியான விரைவான போக்குவரத்தை அளிக்கும். மேலும், சாலைகளில் நெரிசலைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தாக அமையும். தில்லி மெட்ரோவின் விரிவாக்கமாக 6.6 கி.மீ. தூரத்திற்கான இந்தப் பிரிவு இருக்கும்.
இரண்டு அனல் மின் நிலையங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷஹார் மாவட்டத்தின் குர்ஜாவில் 1,320 மெகாவாட் சூப்பர் அனல் மின் திட்டம் இவற்றில் ஒன்றாகும்.
பீகார் மாநிலம் பக்சாரில் 1320 மெகாவாட் அனல் மின் நிலையம் இரண்டாவது திட்டமாகும். இதற்கு காணொலிக் காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டுவார்.
பின்னர் அங்கு திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.