உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு நாளை (பிப்ரவரி 11, 2019) பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிருந்தாவனம் சந்திரோதயா மந்திரில் உள்ள அட்சயப் பாத்திர அமைப்பின் 300-ஆவது கோடி அன்னதானத்தைக் குறிக்கும் பெயர்ப்பலகையை அவர் திறந்துவைக்கிறார்.
பள்ளிகளில் உள்ள சமவாய்ப்பற்ற குழந்தைகளுக்கு பிரதமர் 300-ஆவது கோடி அன்னதானத்தை பரிமாறுவார். பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.
இஸ்கான் அமைப்பின் ஆச்சாரியா ஸ்ரீலா பிரபுபத்-தின் சிலைக்கு பிரதமர் திரு மோடி மலரஞ்சலி செலுத்துவார்.
இந்த அமைப்பின் 300-ஆவது கோடி அன்னதானத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னணி
மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரராக அட்சயப் பாத்திரம் விளங்குகிறது.
தனது 19 ஆண்டு பயணத்தில், 12 மாநிலங்களில் 14,702 பள்ளிகளில் உள்ள 1.76 மில்லியன் குழந்தைகளுக்கு அட்சயப் பாத்திர அமைப்பு மதிய உணவை வழங்கியுள்ளது. 2016-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி முன்னிலையில் அட்சயப் பாத்திரம் அமைப்பு தனது 200-வது கோடி அன்னதானத்தை வழங்கியது.
இந்த அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடனும், மாநில அரசுகளுடனும் இணைந்து, தரமான, தூய்மையான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவை பல கோடி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.
உலகளவில் மதிய உணவு திட்டம் பிரபலமாக உள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை, வருகை மற்றும் பள்ளிக்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் இது உறுதி செய்கிறது.
புதுதில்லியில் அக்டோபர் 24, 2018 அன்று, ‘Self4Society’ செயலியின் துவக்க விழாவின் போது பிரதமர் அட்சயப் பாத்திரம் அமைப்பு பற்றி குறிப்பிட்டிருந்தார். சமூக ஸ்டார்டப் அமைப்பாக தொடங்கப்பட்ட அட்சயப் பாத்திரம், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.