குருகோவிந்த் சிங் அவர்களின் நினைவாக நாணயம் ஒன்றினை 7, லோக் கல்யாண் மார்க், புதுதில்லி என்ற இடத்தில் ஜனவரி 13, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடவிருக்கிறார். குருகோவிந்த் சிங் அவர்களின் பிறந்த ஆண்டினைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி அங்குக் கூடியிருப்போரிடம் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.
சீக்கியர்களின் 10 ஆவது குருவான குருகோவிந்த் சிங், அவரது போதனைகள் மற்றும் சிந்தனைகளின் மூலம் ஏராளமானவர்களுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாக விளங்குகிறார். ஜனவரி 5, 2017 அன்று பாட்னாவில் நடைபெற்ற ஸ்ரீ குருகோவிந்த் சிங் மகாராஜ் அவர்களின் 350 ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இதனை நினைவு கூரும் வகையில் தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 சீடர்கள் மற்றும் கால்சா மூலம் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஒப்பற்ற முயற்சியில் குருகோவிந்த் சிங் எவ்வாறு ஈடுபட்டார் என்பதைப் பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். குருகோவிந்த் சிங் அவர்கள் தமது போதனைகளின் மையப் பொருளாக ஞானத்தை முன்வைத்தார் என்றும் அவர் கூறினார்.
நலிந்த பிரிவினருக்கான குருகோவிந்த் சிங்கின் போராட்டத்தை நினைவு கூர்ந்த பிரதமர், மனித குல துயரங்களை ஒழிப்பதே மிகப்பெரிய சேவையாகும் என்று குருகோவிந்த் சிங் அவர்கள் நம்பியதாக டிசம்பர் 30, 2018 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். குருகோவிந்த் சிங் அவர்களின் துணிவு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் பாராட்டினார்.
ஒட்டுமொத்த மனித குலத்தையும், ஒன்றாகவே கருதவேண்டும்; எவரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை, தீண்டத்தகுந்தவர், தீண்டத்தகாதவர் என்போரும் இல்லை என்ற குருகோவிந்த் சிங்கின் கருத்து இப்போதும் பொருத்தமாக உள்ளது என்று அக்டோபர் 18, 2016 அன்று லூதியானாவில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் நினைவு கூர்ந்தார். சீக்கிய குருக்களின் பாரம்பரியம் என்பது நாட்டுக்காக தியாகம் செய்வதில் முன்னணியில் இருப்பதுதான் என்பதை ஆகஸ்ட் 15, 2016 சுதந்திர தின உரையில் பிரதமர் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தினார்.