ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை புதுதில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (03.10.2018) பெறவிருக்கிறார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 73-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே செப்டம்பர் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த விருதினை ஐ.நா. தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ் வழங்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பணியில் முன்னோடியாக விளங்கியதற்காகவும் 2022-க்குள் இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அனைத்தையும் ஒழிக்க முன் எப்போதும் இல்லாத முறையில் உறுதி எடுத்திருப்பதற்காகவும் தலைமைத்துவ பிரிவில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சுற்றுச்சூழல் மீது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை கொண்டு வரும் செயல்பாடுகளுக்காக அரசு, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சிறப்புமிக்க தலைவர்களுக்கு ஆண்டுதோறும் “புவியின் புரவலர்” விருது வழங்கப்படுகிறது.