7, லோக் கல்யாண் மார்கில் 2022 ஏப்ரல் 26, அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆகியவற்றின் ஓராண்டு கால கூட்டான கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்த கொண்டாட்டங்களுக்கான இலச்சினையையும் அவர் வெளியிடுவார். சிவகிரி புனித யாத்திரை, பிரம்ம வித்யாலயா ஆகியவை மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, திரு நாராயண குருவின் ஆசி மற்றும் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டன.
சிவகிரி புனித யாத்திரை என்பது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை 3 நாட்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரியில் நடைபெறும். திரு நாராயண குருவின் கருத்துப்படி, இந்த புனித யாத்திரையின் நோக்கம், மக்களிடையே விரிவான ஞானத்தை உருவாக்குவதும், அவர்களின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் வளத்திற்கு உதவி செய்வதும் ஆகும். ஆகவே, கல்வி, தூய்மை, கைவிணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் வணிகம், வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த முயற்சி ஆகிய 8 விஷயங்களில் இந்த யாத்திரை கவனம் செலுத்துகிறது.
1933-ல் ஒரு சில பக்தர்களுடன் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த புனித யாத்திரையில் பங்கேற்பதற்காக சாதி, மதம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவகிரிக்கு வருகிறார்கள்.
அனைத்து மதங்களையும், சமநிலையுடனும், சம மதிப்புடனும் பார்க்கின்ற கோட்பாடுகளை போதிப்பதையும் திரு நாராயண குரு தமது தொலைநோக்காக கொண்டிருந்தார். சிவகிரியில் பிரம்ம வித்யாலயம் இந்த தொலைநோக்கை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. திரு நாராயண குருவின் படைப்புகள் மற்றும் உலகின் அனைத்து முக்கியமான சமயங்களின் போதனை நூல்கள் உள்ளிட்ட இந்திய தத்துவம் குறித்த 7 ஆண்டு வகுப்பு பிரம்ம வித்யாலயாவில் நடத்தப்படுகிறது.