தூய்மைக்கான சேவை இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிவைப்பார்.
15 நாட்கள் நடைபெறும் இந்த இயக்கத்தின் விரிவான தொடக்க விழாவின் ஒரு பகுதியாக பிரதமர், நாடெங்கும் 18 இடங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் காணொலி மூலம் கலந்துரையாடவுள்ளார். பள்ளி குழந்தைகள், படை வீரர்கள், பால் மற்றும் வேளாண், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ரயில்வே ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பலருடன் பிரதமர் கலந்துரையாடுவார்.
அக்டோபர் 2, 2018 அன்று தூய்மை இந்தியா இயக்கம் 4 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும், மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டும் பொதுமக்கள் பெருமளவில் தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதே தூய்மைக்கான சேவை இயக்கத்தின் நோக்கமாகும்.
இதற்கு முன்பு காணொலி மூலம் மக்களிடையே பேசிய பிரதமர், “இந்த இயக்கம் காந்தி அவர்களுக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலி ஆகும்” என்று குறிப்பிட்டார். தூய்மையான பாரதத்தை உருவாக்க மக்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தங்களின் முயற்சியை வலுவாக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.