ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் செப்டம்பர் 23, 2018- அன்று பிரதம மந்திரி மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் 10 கோடி குடும்பங்கள், தலா 5 லட்சம் பெருமான காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் பெறும்.
இதுதொடர்பான கண்காட்சி ஒன்றையும் பிரதமர் பார்வையிடவுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பான பயனாளியின் அடையாளத்தை அறிதல், மின்னணு அட்டை உருவாக்குதல் போன்ற செயல் விளக்க நடவடிக்கைகளையும் பிரதமர் பார்வையிடவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சைபாஸா மற்றும் கொடர்மா ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு 10 சுகாதார, மக்கள் நல மையங்களைத் திறந்து வைக்கிறார். பின்னர் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகருக்குப் புறப்படுவதற்கு முன் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
வரும் செப்டம்பர் 24ம் தேதி பாக்யாங் விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். இதன் மூலம் சிக்கிம் மாநிலம் விமான நிலையத்தைப் பெறுகிறது. இது மாநிலத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும். சுற்றுலாவுக்கும் பெரிதும் துணை புரியும். பாக்யாங் விமான நிலையத்தைப் பிரதமர் வந்தடையும்போது, அங்கு அவருக்கு விமான நிலையம், விமான முனையக் கட்டடம் ஆகியவை குறித்து விவரிக்கப்படும். பின்னர் விமான நிலையத்தைத் திறப்பதைக் குறிக்கும் பெயர்ப் பலகையை பிரதமர் திறந்து வைப்பார். அதன் பின் அவர் உரையாற்றுகிறார்.