பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (01.09.2018) புதுதில்லியில் தல்கட்டோரா அரங்கில் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி (IPPB)-யை தொடங்கி வைக்கிறார்.
IPPB சாதாரண மனிதனுக்கான எளிதில் அணுகக்கூடிய குறைந்த கட்டணத்திலான நம்பிக்கை மிகுந்த வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி சார்ந்த அனைத்தும் உள்ளடக்கிய நிலைமை என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்த வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள மூன்று லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் பணியாளர்களை கொண்ட அஞ்சல் துறையின் மிகப் பெரிய கட்டமைப்பை இதற்கு பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாகும். இந்தியாவில் வங்கித்துறை பரவலாக்கலை IPPB குறிப்பிடத்தக்க அளவு விரிவுப்படுத்தும்.
விரைவாக வளர்ந்து வரும் இந்தியாவில் திட்டப்பயன்களை நாட்டின் தொலைதூர மூலைகளுக்கு எல்லாம் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியில் IPPB தொடங்குதல் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
தொடக்க நாள் அன்று IPPB-க்கு 650 கிளைகள் மற்றும் 3,250 பயன்பாட்டு இட ங்கள் ஆகியன இருக்கும். இவை அனைத்தும் நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும். இந்த கிளைகள் மற்றும் பயன்பாட்டு இடங்கள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாட்டில் உள்ள அனைத்து 1.55 லட்சம் அஞ்சலகங்களும், இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் IPPB அமைப்புடன் இணைக்கப்பட்டுவிடும்.
IPPB-யில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, பணம் அனுப்புதல், அரசுத்திட்டப் பயன்களை பயனாளிகள் கணக்கில் நேரடியாக செலுத்துதல், பில்லுக்கு பணம் செலுத்துதல், வர்த்தக செலுத்துகைகள், போன்ற சேவைகள் வழங்கப்படும். இது போன்ற சேவைகள் அனைத்தும், இந்த வங்கியின் அதநவீன தொழில்நுட்ப மேடையை பயன்படுத்தி நேரடி கவுண்டர் சேவைகள், சிறிய ஏடிஎம்-கள், கைபேசி வங்கி செயலிகள், எஸ் எம் எஸ் மற்றும் ஐ வி ஆர் மூலமாக வழங்கப்படும்.