ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கான 'பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில்' 2021 ஜனவரி 16 அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார். இம்மாநாட்டின் போது ஸ்டார்ட் அப் நிறுனங்களை சேர்ந்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
வர்த்தகம், தொழில் அமைச்சகத்தின், தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. பிம்ஸ்டெக் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை நடத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ஆகஸ்ட் 2018-இல் காத்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் உறுதியளித்தவாறு இந்த இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2016 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்னெடுப்பின் ஐந்தாவது ஆண்டு நிறைவில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. 25-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறும் இந்த உச்சி மாநாடு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய பின்பு நடைபெறும் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஆகும்.
ஸ்டார்ட் அப் சூழலியல்களை உருவாக்கி வலுப்படுத்தும் விதமாக, உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டை மேம்படுத்தும் வகையில் 24 அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும்.