பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் (பிஎம்ஆர்பிபி) விருதாளர்களுடன் ஜனவரி 24-ந்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். 2022 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான பிஎம்ஆர்பிபி விருதாளர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக டிஜிடல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. விருதாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முதல்முறையாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
புத்தாக்கம்,சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை புரியும் சிறார்களுக்கு பிஎம்ஆர்பிபி விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 29 குழந்தைகள், பல்வேறு பிரிவுகளில் பால் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு விருதாளருக்கும், ஒரு பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ரொக்கப் பரிசு விருதாளரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.