பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 11-ம் தேதி மாலை 4:30 மணியளவில் நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கிராண்ட் ஃபினாலேவில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
நவீன இந்தியா ஹேக்கத்தானின் 7 வது பதிப்பு 11 டிசம்பர் 2024 அன்று நாடு முழுவதும் 51 நோடல் மையங்களில் ஒரே நேரத்தில் தொடங்கும். மென்பொருள் பதிப்பு 36 மணிநேரம் இடைவிடாமல் இயங்கும். அதே நேரத்தில் வன்பொருள் பதிப்பு டிசம்பர் 11 முதல் 15 வரை தொடரும். கடந்த பதிப்புகளைப் போலவே, மாணவர் குழுக்கள் அமைச்சகங்கள், துறைகள், தொழில் நிறுவனங்கள், ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட 17 கருப்பொருள்களுக்கு எதிராக மாணவர் கண்டுபிடிப்பு பிரிவில் தங்கள் யோசனைகளை சமர்ப்பிக்கும். சுகாதாரம், விநியோகச் சங்கிலி, தளவாடங்கள், நவீன தொழில்நுட்பங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், நிலைத்தன்மை, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, நீர், வேளாண்மை, உணவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆண்டு பதிப்பில் இஸ்ரோ வழங்கிய 'சந்திரனில் இருண்ட பகுதிகளின் படங்களை மேம்படுத்துதல்', ஜல் சக்தி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட 'செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் தரவுகள், இணையதளம் சார்ந்த யோசனைகள் மற்றும் மாறும் தன்மை கொண்ட மாதிரிகளைப் பயன்படுத்தி நிகழ்நேர கங்கை நீர் தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்குதல்', ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட 'செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைந்த நவீன யோகா விரிப்பை உருவாக்குதல்' ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு, 54 அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் 250-க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பித்தன. நிறுவனங்கள் நிலையிலான ஹேக்கத்தான் போட்டிகளின் பதிவு 150% அதிகரித்துள்ளது. இது நவீன இந்தியா ஹேக்கத்தான் 2023-ல் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது (900). நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பதிவுகளின் எண்ணிக்கை 2,247 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை நடந்த போட்டிகளில் மிக அதிகமான ஒன்றாகும். நிறுவனங்கள் நிலையில் 86,000-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. மேலும் தேசிய அளவிலான சுற்றுக்கு சுமார் 49,000 மாணவர் குழுக்கள் தலா 6 மாணவர்கள் கொண்ட குழு மற்றும் 2 வழிகாட்டிகளுடன் இந்த நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.