டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மஜந்தா நிற வழித் தடத்தை (Magenta line) பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 25-ம் தேதி தொடங்கிவைக்கிறார். இந்த வழித்தடம், நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி கோவிலுடன் இணைக்கிறது. இதன்மூலம், நொய்டா மற்றும் தெற்கு தில்லி இடையேயான பயண நேரம் குறிப்பிடத்தகுந்த அளவு குறையும். இந்த நிகழ்ச்சியையொட்டி, நொய்டாவில் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
நாட்டில் நகர்ப்புற போக்குவரத்தை நவீனமயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில், மேலும் ஒரு இணைப்பை புதிய வழித்தடம் உருவாக்க உள்ளது. இது பொதுமக்களுக்கான அதிவேக நகர்ப்புற போக்குவரத்து அமைப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சியாக உள்ளது.
இது 2017-ம் ஆண்டில் பிரதமர் தொடங்கிவைக்கும் மூன்றாவது மெட்ரோ ரயில் வழித்தடமாகும். இதற்கு முன்னதாக, கொச்சி மெட்ரோ ரயில் பாதையை கடந்த ஜூன் மாதத்திலும், ஐதராபாத் மெட்ரோ ரயில் பாதையை நவம்பர் மாதத்திலும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, புதிய வழித்தடத்தில் பிரதமர் பயணம் மேற்கொள்வார். பின்னர், பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்துசேர்வார்.
தேசிய தலைநகரப் பகுதியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்லும்போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கடி மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துகிறார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடியும், அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவும், டெல்லியிலிருந்து குர்கானுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு, சர்வதேச சூரிய கூட்டமைப்பின் தலைமையகத்துக்கு கூட்டாக அடிக்கல் நாட்டி வைத்தனர். மிகவும் அண்மையில், கடந்த ஏப்ரல் 2017-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல்-லும் அக்ஷர்தாம் கோவில் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
பொதுமக்களுக்கான அதிவேக போக்குவரத்து முறைகள் மூலம், இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு, சுமார் 165 கிலோமீட்டர் தொலைவுக்கு 9 மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கிவைத்துள்ளது. 140 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கான 5 புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் வழித் தடங்களை தொடங்கிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.