'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி மாலை 4:45 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவைக் கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் நேரலையாகக் காணலாம்
https://pmindiawebcast.nic.in/
பின்னணி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கண்காணிப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக இந்த மாநாட்டின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
வெளிநாட்டின் அதிகார வரம்பிற்குள் புலனாய்வு மேற்கொள்வதில் உள்ள சவால்கள், ஊழலுக்கு எதிராக முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு நடவடிக்கைகள், வங்கிக் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகள், நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையான தரமான தணிக்கை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், மேம்பாடு மற்றும் பயிற்சி, பலதரப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து துரிதமான மற்றும் திறமையான புலனாய்வுக்கு வழிவகை காண்பது, வளர்ந்து வரும் பொருளாதார குற்றங்களின் போக்கு, கணினி சார்ந்த குற்றங்கள், பன்னாட்டு குற்றங்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வு முகமைகள் மேற்கொள்ளும் தடுப்பு நடைமுறைகள் குறித்த தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தலைப்புகள் இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாடு ஊழலை எதிர்க்கும் பொருட்டு எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளை மேலும் செரிவூட்ட உதவும். இது இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
தொடக்க விழாவில், மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான மேம்பாட்டுத்துறை (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்க உரை ஆற்றுவார்.
ஊழல் தடுப்புப் பிரிவுகள், கண்காணிப்புப் பிரிவுகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொருளாதார குற்றப் பிரிவுகளின் தலைவர்கள், மத்திய தலைமை கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட மத்திய முகமைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொள்வார்கள்.