டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்திய தில்லி இலக்கம் 26, அலிப்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை (டிஏஎன்எம்) பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (13.04.2018) திறந்துவைக்கிறார்.
அந்த இடத்தில்தான் 1956-டிசம்பர் 6ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் காலமானார்.
டாக்டர் அம்பேத்கர் மஹா பரிநிர்வாண ஸ்தலம் அலிப்பூர் சாலை, இலக்கம் 26-ல் 2003 டிசம்பர் 2-ஆம் தேதி அப்போதைய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயினால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த நினைவிடத்திற்கு 2016 மார்ச் 21ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் அரசியல் சாசனச் சிற்பியான டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் நினைவிடம் ஒரு புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் நவீன இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றைப் புகைப்படங்கள், காணொளி, காட்சிக் கேள்வி நிகழ்ச்சிகள், பல்லூடகத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதாக அமையும்.
ஒரு தியான மண்டபமும் உருவாக்கப்பட்டுள்ளது. தோரண வளைவு, போதிமரம், இசைக்கு ஏற்ப நடனமிடும் நீரூற்று, முகப்பு விளக்குகள் ஆகியன இந்த நினைவிடத்தின் இதர முக்கிய அம்சங்களாகும்.